ஆப்கானிஸ்தானில் ஏற்பட்டுள்ள மோசமான வறட்சி பலரது வாழ்க்கையையும் அவர்களின் எதிர்காலத்தையும் மிக மோசமாக பாதித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பலரை இடம்பெயரச் செய்துள்ளதுடன் இடம்பெயர்ந்த மக்களிடையே பெரும் மனிதாபிமான நெருக்கடியை உருவாக்கி உள்ளது எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அரசுக்கும் தலிபான்களுக்கும் இடையே நடைபெறும் யுத்தத்தின் காரணமாக இடம்பெயர்ந்தவர்களைவிட வறட்சியின் காரணமாக தங்களின் வசிப்பிடங்களைவிட்டு இடம்பெயர்ந்தவர்கள் அதிகம் எனவும் பல ஆண்டுகால மோசமான யுத்தத்தை வறட்சி வென்றுள்ளது எனவும் தெரிவிப்ப்பட்டுள்ளது.
ஆப்கானிஸ்தானின் வடக்கு மற்றும் மேற்குப் பகுதிகளில் சுமார் 260,000 பேர் வறட்சியினால் தங்கள் வசிப்பிடங்களிலிருந்து வெளியேறி வேறிடங்களில் குடிபெயர்ந்துள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டில் நடந்த 2014ஆம் ஆண்டு சர்வதேச படைகள் போர் நடவடிக்கையை நிறுத்தியதன் பின்னர் அங்கு வன்முறை சம்பவங்கள் உயர்ந்துள்ள நிலையில் மக்களின் வாழ்வில் இந்த வறட்சியும் மோசமான தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.
இதேவேளை இவ்வாறு வறட்சியால் பாதிக்கப்பட்ட 2.2 மில்லியன் மக்களுக்கு உதவும் முகமாக ஐக்கிய நாடுகள் அமைப்பின் உலக உணவுத்திட்டம் 34.6 மில்லயன் டொலர் நிதியை ஒதுக்கி உள்ளது.