அமெரிக்க – மெக்ஸிக்கோ எல்லைப் பகுதியில் நிர்மாணிப்பதற்கு உத்தேசிக்கப்பட்டுள்ள தடுப்புச்சுவருக்கு அமெரிக்க பிரதிநிதிகள் சபை தடைவிதித்து வாக்களித்துள்ளது. ஜனநாயகக் கட்சியின் பெரும்பான்மையுள்ள அமெரிக்க பிரதிநிதிகள் சபையிலேயே, ஜனாதிபதியின் குறித்த தீர்மானத்துக்கு எதிராக வாக்களிக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், குறித்த தீர்மானத்தை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், தமது வீட்டோ அதிகாரத்தைப் பயன்படுத்தி மீறக்கூடிய வாய்ப்பே காணப்படுவதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தமது தீர்மானத்தின்படி அமெரிக்க – மெக்ஸிக்கோ எல்லையில் நிர்மாணிக்கப்படவுள்ள தடுப்புச் சுவருக்கான நிதி ஒதுக்கீடுகளை இரத்துச் செய்யும் எந்தவொரு தீர்மானத்தையும் தாம் நிராகரிக்கப்போவதாக ட்ரம்ப் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே, குறித்த திட்டத்துக்கான நிதி ஒதுக்கீடுகளை இல்லாமல் செய்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பிரதிநிதிகள் சபையின் அவைத்தலைவர் நான்சி பெலோஸி (Nancy Pelosi) தெரிவித்துள்ளார்.
இருப்பினும், குறித்த சட்டத்தின்மீது வாக்கெடுப்பைக் கூட நடாத்தவேண்டிய அவசியம் இல்லை என ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சி பெரும்பான்மை பெற்றுள்ள செனட் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்குள் சட்டவிரோதமாகக் குடியேறும் குடியேற்றவாசிகளைக் கட்டுப்படுத்தும் நோக்கிலேயே இந்தத் தீர்மானம் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் கொண்டுவரபட்டிருந்ததுடன், இதற்கு ஆதரவாகவும் எதிராகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.