பிரான்சில் எரிபொருள் வரி அதிகரிப்புக்கெதிராக மேற்கொள்ளப்படும் மஞ்சள் அங்கி போராட்டம் மீண்டும் வலுப்பெற்றுள்ள நிலையில் பல இடங்களில் வன்முறை வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எரிபொருள் வரி உயர்வை கண்டித்து ஆரம்பித்த போராட்டம், அரசின் பல்வேறு கொள்கைகளுக்கு எதிராக திரும்பியுள்ளதனால் பெருந்திரளான மக்கள் இந்த போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்.
ஒவ்வொரு வாரத்தின் இறுதிநாட்களிலும் நடைபெற்ற இந்த போராட்டத்தின் போது ஏற்பட்ட வன்முறைகள் காரணமாக 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
இந்த நிலையில் 8-வது வாரமாக நேற்று முன்தினம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் இணைந்து கொண்டதனால் மஞ்சள் அங்கி போராட்டம் மீண்டும் வலுப்பெற்றதுடன் பல இடங்களில் வன்முறைகளும் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பாரீசில் செயின்ட் ஜெர்மைன் என்னும் இடத்தில் ஒன்றுகூடிய போராட்டக்காரர்கள் பல இடங்களுக்கு தீ வைத்ததாகவும் இதனால் அங்கு பதற்றமான சூழல் உருவானதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது இதையடுத்து வன்முறையை கட்டுப்படுத்த காவல்துறையினர் கண்ணீர் புகை குண்டுகளை வீசி போராட்டக்காரர்pகளை விரட்டியுள்ளனர்.
இந்த நிலையில் மஞ்சள் அங்கி போராட்டத்தின் போது வன்முறை ஏற்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஜனாதிபதி இமானுவல் மைக்ரோன் பேச்சுவார்த்தையின் மூலம் தீர்வு காண வேண்டும் என வலியுறுத்தி உள்ளார்.