நாடு தழுவிய அளவில் மத்திய தொழிற்சங்கங்கள் நடத்திவரும் 48 மணி நேர வேலை நிறுத்தத்தால் வட மாநிலங்களில் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளதுடன் சில இடங்களில் வன்முறைகளும் வெடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
பொதுத்துறை மற்றும் அரசு நிறுவனங்களை தனியார் துறையிடம் ஒப்படைக்கும் மத்திய அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவித்தும், பணி நிரந்தரம், தொழிலாளர்களுக்கு சமூக பாதுகாப்பு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தியும் மத்திய அரசுக்கு இன்றும் நாளையும் நாடு தழுவிய வேலை நிறுத்தம் நடத்தப்படுகின்றது.
இந்த தொழிற்சங்கங்களை சேர்ந்த அரசு ஊழியர்கள் வங்கி ஊழியர்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள், முச்சக்கரவண்டி , பேருந்து மற்றும் வாகன தொழிற்சங்கங்களைச் சேர்ந்தவர்கள் இதில் கலந்து கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இன்று காலை தொடங்கிய வேலைநிறுத்தத்தால் கேரளா, கர்நாடகம், மேற்கு வங்காளம், அசாம் மாநிலங்களில் கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
கொல்கத்தா அருகே பராசாட் என்ற இடத்தில் மறியலில் ஈடுபட்ட தொழிற்சங்கத்தினர் அந்த பக்கமாக சென்ற பாடசாலை பேருந்து மீது கல்வீசி தாக்ககியதாகவும் எனினும் யாருக்கும் பாதிப்புகள் ஏற்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சில பகுதிகளிலும் கல்வீச்சுகள் மேற்கொள்ளப்பட்டதாகவும் இதனைத் தடுத்த காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்குமிடையில் மோதல்கள் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது
எனினும் இந்தப் போராட்டம் தமிழ்நாட்டில் எவ்வித தாக்கத்தையும் ஏற்படுத்தவில்லை எனவும் பாடசாலைகள் கல்லூரிகள் வழமை போல் செயல்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது