குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட தரவன் கோட்டை கிராமத்தில் உள்ள வீடு ஒன்றின் வளாகத்தினுள் இன்று (9) புதன் கிழமை அதிகாலை உள்ளே சென்ற முதலை ஒன்றை குறித்த வீட்டின் உரிமையாளர்கள் பிடித்து கட்டி வைத்துள்ளனர்.
முதலையைக் கண்ட வீட்டின் உரிமையாளர் கிராம மக்களின் உதவியுடன் பிடித்து கட்டியுள்ள குறித்த முதலை சுமார் 7 அடி நீளம் கொண்டது என தெரிய வருகின்றது. குறித்த வீட்டை சுற்றி குளம் மற்றும் நீர்த்தேக்கம் எவையும் இல்லாத நிலையில், முதலை காட்டில் இருந்து நீரையும், ஆடு,நாய்,கோழி போன்றவற்றை வேட்டையாடும் நோக்கில் கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என மக்கள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பில் கிராம அலுவலகர் மற்றும் மன்னார் காவல்துறையினருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது