குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.வடமராட்சி பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பதாகையில் காணப்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் , ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரனின் படத்திற்கு நிறப்பூச்சு (பெயின்ட்) பூசப்பட்டு உள்ளது.
வடமராட்சி பகுதியில் ‘கம்பெரலிய அபிவிருத்தி யுத்தம் ‘ எனும் தொனிப்பொருளின் ஊடாக வடமராட்சி கொட்டடி சித்தி விநாயகர் ஆலய கேணி மற்றும் பருத்தித்துறை நீதிமன்ற வீதி ஆகியன புனரமைப்பு செய்யப்பட்டன.
புனரமைப்பு செய்யப்பட்ட கேணி மற்றும் வீதி ஆகியன மக்கள் மயப்படுத்தப்பட்ட பின்னர் அது குறித்த பதாகைகள் அருகில் காட்சி ப்படுத்தப்பட்டு உள்ளன.
குறித்த பதாகையினை கடந்த புதன் கிழமை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம் . ஏ.சுமந்திரன் திரைநீக்கம் செய்து வைத்தார்.
குறித்த பதாகையில் ஜனாதிபதி , பிரதமர் மற்றும் எம். ஏ சுமந்திரன் ஆகியோரின் படங்களும் காணப்பட்டன. அதில் நேற்றைய தினம் இரவு இனம் தெரியாத நபர்கள் பாராளுமன்ற உறுப்பினரின் படத்தின் மீது வர்ண பூச்சு (பெயின்ட்) பூசி அவரது படத்தினை மறைத்துள்ளார்கள்.
குறித்த பதாகையில் எம்.ஏ சுமந்திரனின் படம் காணப்பட்டமை சமூக வலைத்தளங்களில் விமர்சனங்களுக்கு உள்ளாகி இருந்தமை குறிப்பிடத்தக்கது.