ஊடகவியலாளர் போத்தல ஜயந்த கடத்தப்பட்டு, தாக்கப்பட்டமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து வரும் குற்றப்புலனாய்வு பிரிவினர் மேல் மாகாண வடக்குக்கு பொறுப்பான பிரதி காவல்துறைமா அதிபர் தென்னகோனிடம் வாக்குமூலம் ஒன்றினைப் பெற்றுள்ளனர்.
ஊடகவியலாளர் போத்தல ஜயந்த 2009ஆம் ஆண்டு ஜுன் மாதம் வெள்ளைவான் ஒன்றில் கடத்திச் செல்லப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளாக்கப்பட்டு, வீதியில் வீசப்பட்டிருந்தார்.
இந்தநிலையில் ஊடகவியலாளர் போத்தல கட்டத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் தென்னகோன் நுகேகொடை பகுதிக்கு பொறுப்பான காவல்துறை அத்தியட்சகராக கடமையாற்றியிருந்தார்.
போத்தல கடத்தப்பட்டு கடும் சித்திரவதைகளுக்கு உள்ளானமைத் தொடர்பில் மிரிஹான காவல்துறையினர் இந்த சம்பவத்துடன் தொடர்பில்லாத இருவரை கைது செய்து சிறையில் அடைத்துள்ளதாகவும் இதன்போது பிரதி காவல்துறைமா அதிபர் தென்னகோன் நுகேகொட பிரிவுக்கு பொறுப்பாக இருந்தமையால் அது குறித்து அவரிடம் வாக்குமூலம் பெறப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்தச் சம்பவம் தொடர்பில் போத்தல ஜயந்த குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் செய்த முறைபாட்டுக்கு அமைய, குற்றப்புலனாய்வு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.