இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடி குறித்து புதிய தகவல்கள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சர்வதேச கிரிக்கெட் சபையின் மோசடிக்கெதிரான பிரிவின் பொது முகாமையாளர் அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார்.
இலங்கை கிரிக்கெட்டில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மோசடிகள் தொடர்பாக முறையிடுவதற்கு இம்மாதம் 16ஆம் திகதி முதல் 31ஆம் திகதி வரை மன்னிப்புக் காலத்தை சர்வதேச கிரிக்கெட் சபை வழங்கியிருந்த நிலையிலேயே இவ்வாறு தகவல் வெளியாகியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.
குறித்த 15 நாள் மன்னிப்புக் காலத்தின் முதல் வாரத்தில் குறிப்பிட்ட எண்ணிக்கையானோர் தகவல்வழங்க முன்வந்துள்ளமை தொடர்பில் தான் ஊக்கமடைந்துள்ளதாக அலெக்ஸ் மார்ஷல் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கிரிக்கெட் சபையால், மோசடிக்கெதிரான நடத்தைக் கோவையின் கீழ் இலங்கையணியின் முன்னாள் தலைவரும் முன்னாள் தலைமைத் தேர்வாளருமான சனத் ஜெயசூரிய, முன்னாள் வீரர்களான நுவான் சொய்ஸா, டில்ஹார லொக்குஹெட்டிகே ஆகியோர் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.