178
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
எதிர்வரும் 2020ம் ஆண்டு சாவகச்சேரி நகரசபைக்கு உட்பட்ட பகுதிகளில் பொலித்தீன் பாவனை முற்றாக இல்லாமல் செய்யப்படும் என சாவகச்சேரி நகராட்சி மன்ற பொதுச்சுகாதார பரிசோதகர் பி.தளிர்றாஜ் தெரிவித்தார்.
சாவகச்சேரி நகரசபை எல்லைக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ள “பொலித்தீன் அற்ற நகரம்” செயற்திட்டம் தொடர்பில் விளக்கமளிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
எமது பகுதியில் உணவகங்களில் இருந்தே அதிகளவான பொலித்தீன் கழிவுகள் அகற்றப்படுகின்றன. அதனைக் கட்டுப்படுத்த கடந்த முதலாம் திகதி முதல் சாவகச்சேரி நகரசபைக்குட்பட்ட உணவகங்களின் பொலித்தீன் கழிவுகளை தனியாக பிரித்து அகற்றுகின்ற நடைமுறை அமுல்படுத்தப்பட்டுள்து.
இதனால் உணவக உரிமையாளர்கள் பொலித்தீன் பாவனையினை படிப்படியாக குறைத்து வாழை இலை போன்றவற்றை பயன்படுத்த ஆரம்பித்து எமது செயற்திட்டத்துக்கு ஒத்துழைப்பு வழங்குகின்றனர்.
மேலும் நகரப்பகுதி சந்தைப்பகுதி ஆகியவற்றில் பொலித்தீன் கழிவுகளை மட்டும் சேகரிப்பதற்கு விசேட கழிவு தொட்டிகளும் வைக்கப்பட்டுள்ளன.
அதுமட்டுமின்றி எமது பகுதி பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு பொலித்தீன் தொடர்பான விழிப்புணர்வு செயற்திட்டத்தினையும் மேற்கொண்டு வருகின்றோம். இந்த பொலித்தீன் அற்ற நகரம் செயற்திட்டத்துக்கு வர்த்தகர்கள் பொதுமக்கள் சிறந்த ஒத்துழைப்பினை வழங்குகின்றனர்.
அத்தோடு எமது நகராட்சி மன்ற தவிசாளர் உறுப்பினர்கள் அனைவரும் பூரண ஆதரவையும் பங்களிப்பையும் வழங்குகின்றனர். இதனால் எமது சாவகச்சேரி நகராட்சி மன்ற எல்லைக்குள் 2020 ம் ஆண்டு பொலித்தீன் பாவனை முற்றாக இல்லாமல் செய்யப்படும்.
மேலும் பொலித்தீன் பயன்பாட்டையும் விற்பனையையும் எமது பகுதிக்குள் முதலாவதாக முற்றாக நிறுத்துகின்ற வர்த்தகருக்கு விஷேட விருதும் ஊக்குவிப்பும் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என பொதுச்சுகாதார பரிசோதகர் பி.தளிர்றாஜ் தெரிவித்தார்.
Spread the love