விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு எதிர்வரும் மார்ச் மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த நிலையில் விஜய் சேதுபதியுடன் நடிப்பதற்கு இரண்டு நாயகிகள் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர்.
விஜய் சேதுபதியின் நடிப்பில் சூப்பர் டீலக்ஸ், சிந்துபாத் முதலிய திரைப்படங்கள் வெளியீட்டுக்கு காத்திருக்கின்றன. விஜய் சேதுபதி தற்போது சீனு ராமசாமி இயக்கத்தில் மாமனிதன் என்ற திரைப்படத்தில் நடித்து வருகிறார். சீனு ராமசாமி விஜய் சேதுபதியை தென்மேற்குப் பருவக்காற்று திரைப்படத்தில் அறிமுகப்படுத்தியவர் ஆவார்.
தொடர்ந்து, ‘வாலு’ மற்றும் ‘ஸ்கெட்ச்’ திரைப்படங்களை இயக்கிய விஜய் சந்தரின் இயக்கத்திலும் நடிக்கவுள்ளார். குறித்த திரைப்படத்தின் படப்பிடிப்புக்கள் எதிர்வரும் மார்ச் மாத்தில் ஆரம்பிக்கப்படவுள்ளது. இதேவேளை இந்தப் படத்தில் விஜய் சேதுபதியுடன் நகைச்சுவை நடிகர் சூரியும் நடிக்கின்றார்.
விஜய் சேதுபதிக்கு கதாநாயகியாக நடிக்கும் இருவர் யார் என்பது உறுதி செய்யப்படாமல் இருந்து வந்த நிலையில், தற்போது நிவேதா பெத்துராஜ், ராஷி கண்ணா ஆகியோர் நடிக்க ஒப்பந்தமாகியிருப்பது தெரியவந்துள்ளது. இருவருமே அண்மைய காலத்தில் தமிழ் சினிமாவில் கவனத்தை ஈர்த்துள்ள கதாநாயகிகள் என்பது குறிப்பிடத்தக்கது. வடசென்னை கதையாக உருவாகும் இந்த படத்தை விஜயவாகினி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.