Home உலகம் முன்னெப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு கரியமில வாயுவின் அளவு அதிகரிக்கும்

முன்னெப்போதும் இல்லாத அளவு இந்த ஆண்டு கரியமில வாயுவின் அளவு அதிகரிக்கும்

by admin


முன்னெப்போதும் இல்லாத வகையில் பூமியின் வளிமண்டலத்தில் கார்பன்-டை-ஒக்சைட் (கரியமில வாயு) வின் அளவு இந்த ஆண்டு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக பிரித்தானிய வானிலை மைய ஆராய்ச்சியாளர்கள் எச்சரித்துள்ளனர்.

கரியமில வாயுவை ஒக்ஸிசனாக மாற்றும் காடுகளின் பரப்பளவு ஒவ்வொரு வருடமும் குறைந்து வரும் அதே வேளை மனிதர்களின் செயல்பாடுகளால் வெளியாகும் கரியமிலவாயுவின் அளவும் அதிகரித்து வருகிறது.

அதே வேளை அண்மைய ஆண்டுகளில் வெப்பமண்டல பசுபிக் பிராந்தியத்தில் வெப்பநிலை அதிகரித்து வருவதால், அங்கு மரங்கள், செடிகளின் வளர்ச்சி அளவு குறைந்து கரியமிலவாயு உறிஞ்சப்படுவதும் குறைந்து வருகிறது.

இதன் விளைவாக, 2018ஆம் ஆண்டை காட்டிலும், 2019ஆம் ஆண்டு கரியமிலவாயு வெளியாவது அதிகளவில் காணப்படும் என ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

1958 ஆம் ஆண்டு முதல், அமெரிக்காவின் ஹவாயிலுள்ள ஆராய்ச்சி ஆய்வு மையம் வளிமண்டலத்திலுள்ள இரசாயன கலவை பற்றிய தரவுகளை தொடர்ந்து கண்காணித்து சேகரித்து வருகின்ற நிலையில் இதுவரை வளிமண்டலத்திலுள்ள கரியமிலவாயுவின் செறிவு 30 சதவீதம் அதிகரித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் பெட்ரோலியப் பொருள்களின் பயன்பாடு மற்றும் காடுகள் அழிப்பே இதற்கு முக்கிய காரணம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. .

கோடைகாலத்தில் மரங்களும், செடிகளும் வளரத் தொடங்கி அதிகளவிலான கரியமிலவாயுவை உறிஞ்சுவதால் வளிமண்டலத்தில் கரியமிலவாயுவின் அளவு குறைந்து காணப்படுகிறது. குளிர்காலத்தின்போது மரங்களிலுள்ள இலைகள் உதிர்ந்து கரியமிலவாயுவை உறிஞ்சுவது குறைவதால் வளிமண்டலத்தில் அவற்றின் அளவு அதிகரித்து காணப்படுகிறது.

அதிகரித்து வரும் வெப்பம் உலகம் முழுவதும் வேறுபட்ட விளைவுகளை ஏற்படுத்தி வருகிறது. சில பகுதிகளில் அதிக வெப்பநிலை மற்றும் வறட்சியின் காரணமாக காட்டுத்தீ சம்பவங்கள் ஏற்பட்டு பெரும் சேதத்தை உருவாக்கும் அதேவேளை மழைக்காடுகளில் அதிகரிக்கும் வெப்பம் தாவரங்களின் வளர்ச்சியை பாதிக்கிறது.

இந்த நிலையிலேயே வளிமண்டலத்திலுள்ள கரியமிலவாயுவின் அளவு, 2018ஐ ஆண்டை காட்டிலும், 2019ஆம் ஆண்டு அதிகரிக்கும் என பிரித்ததானிய தேசிய வானிலை ஆராய்ச்சி மையம் கணித்துள்ளது.

எனினும் அதிகரித்து வரும் கரியமிலவாயுவின் செறிவு மட்டும் இந்தாண்டு வரலாற்றிலேயே அதிகபட்ச வெப்பநிலையை உலகம் சந்திப்பதற்கு வித்திடும் என கருதமுடியாது எனவும் இன்னும்பிற இயற்கை காரணிகளை பொறுத்தே இதன் முடிவு அமையுமெனவும் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தங்களது ஆராய்ச்சி முறையின் மூலம் கடந்த நான்காண்டுகளாக மேற்கொண்டு வரும் கணிப்புகள் துல்லியமானதாக உள்ளதாகவும், எதிர்காலத்தில் இதை பயன்படுத்தி நச்சு வாயுக்களின் அளவை குறைப்பதற்கான திட்டத்தை ஏற்படுத்துவதற்கு பல்வேறு நாடுகளுக்கு உதவ முடியமெனவும் விஞ்ஞானிகள் நம்பிக்கை வெளியிட்டுள்ளனர்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More