இலங்கை கட்டுரைகள் பிரதான செய்திகள்

சீரற்ற போக்குவரத்து சேவைகளால் பாதிக்கப்படும் அபிவிருத்தி

போக்குவரத்து வசதி என்பது மக்களின் அத்தியாவசிய தேவைகளுள் ஒன்று என்பதோடு  நாட்டின் பொருளாதார வளர்ச்சியிலும் முக்கிய பங்கு வகிக்கின்ற ஒரு விடயமாகும். தினமும் ஏதோ ஒரு தேவைக்காக பயணங்களை மேற்கொள்ளுவது என்பது தவிர்க்கமுடியாத ஒரு செயற்பாடாகவே காணப்படுகின்றது. அதுமட்டுமல்லாது சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்துக்கு இந்த போக்குவரத்து வசதி என்பது மிக முக்கியமான பங்கு வகிக்கின்றது.

வடமத்திய மாகாணம் ஹொறவ்பொத்தானை பிரதேசத்தில் இந்த போக்குவரத்துப்பிரச்சனை மிகப்பெரிய பிரச்சனையாக உள்ளதை அவதானிக்க முடிந்தது. ஹொறவ்பொத்தானையிலிருந்து மதவாச்சி செல்லும் B282 வீதிக்கான போக்குவரத்து சேவை மிகவும் போசமான நிலையில் இடம்பெறுவதாக மக்கள் விசனம் தெரிவித்துள்ளனர். குறிப்பாக அரச போக்குவரத்து சேவை இப்பகுதியில் மிக மிக குறைவாகவே இடம்பெறுகின்றது. அதாவது பாடசாலை சேவைக்கான ஒரு பேருந்து மட்டுமே சேவையில் ஈடுபட்டுள்ளது. பொதுமக்களுக்கான சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் சேவை பேருந்துகளும் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் சேவையில் ஈடுபடுவதில்லை. இதனால் ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் இவ் வீதியினூடாக பயணிக்கும் மக்கள் தமது சொந்த வாகனத்தையே பயன் படுத்த வேண்டும் இல்லையேல் வாடகை வாகனங்கள், முச்சக்கர வண்டி என்பவற்றின் மூலமே பயணிக்க முடியும்.

இது தொடர்பாக ஹொறவ்பொத்தானை டிப்போவிடம் விசாரித்தபோது  பேருந்துசேவை இடம்பெறுவதில்லை என அவர்கள் உறுதிப்படுத்தினர்.  அதற்குரிய காரணம் என்ன என கேட்டதற்கு அவர்களால் பதில் கூற முடியாமல் உள்ளது. ஆனால் .பாடசாலை சேவைக்கான பேருந்து பணியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறுகின்றனர். இது தொடர்பாக பொதுமக்கள் ஒரு சிலர் கருத்து தெரிவிக்கையில் தனியார் போக்குவரத்து சேவையில் ஈடுபடுபவர்கள் தம் வருமானத்தை கருத்தில் கொண்டு அரச போக்குவரத்து சேவை நடைபெறுவதை தடுக்கிறார்கள் எனவும், பல தடவை இவர்களுக்கிடையில் மோதல் ஏற்பட்டதாகவும் கூறுகின்றனர்.இதே போல் அனுராதபுரம் டிப்போவிடம் கேட்டபோது அவர்கள் தொலைபேசியை துண்டிக்கும் நிலையே காணப்படுகிறது.

சேவையில் ஈடுபட்டுள்ள தனியார் போக்குவரத்து சேவை ஞாயிறு தினங்களில் நடைபெறாதமைக்குரிய காரணம் என்ன என வினாவும் போது பொதுமக்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைக்கின்றனர். மிக முக்கியமாக ஞாயிறு வியாபார நிலையங்கள் மூடி இருப்பதால் போக்குவரத்து தேவை குறைவாக நடைபெறும் எனவும் அதனால் தான் அவர்கள் சேவையில் ஈடுபடுவதில்லை என ஒரு சாரார் கருத்து தெரிவித்தாலும் வேறு சிலர் அவசர தேவைகள் வைத்தியசாலை போன்றவற்றுக்கான பயணங்களுக்கு மிகவும் சிரமமாக இருப்பதாகவும் கூறுகின்றனர்.

ஹொறவ்பொத்தானை நகரத்தில் இருந்து சுமார் 8 KM  தொலைவில் அமைந்துள்ள கிரலகல ஒரு தொல்லியல் பிரதேசமாகும். வெஹரதிகல என்வும் அழைக்கப்படும் இப் பிரதேசம் 250 ஏக்கர் நிலப்பரப்பை கொண்டது. மன்னன் கஜபாவின் காலத்துக்குரிய கட்டட எச்சங்கள் உள்ள இப்பகுதியை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு வரை தொல்பொருள் திணைக்களம் கூட கண்டுகொள்ளாத நிலையே காணப்பட்டது. இப்போது இப்பகுதி தொல்பொருள் திணைக்கலத்தின் கட்டுப்பாட்டுக்குள் இருப்பதால் சுற்றுலா வருபவர்கள், பாடசாலை மானவர்கள் என பலரும் சென்று பார்வையிடுகின்றனர். இவ்வாறு ஒரு முக்கிய வரலாற்றுப்பகுதியை பார்க்க செல்பவர்கள் கூடுதலாக ஓய்வு நாட்கள், அல்லது விடுமுறை நாட்களிலேயே தம் பயணத்தை மேற்கொள்கின்றனர். ஆனால் ஹொறவ்பொத்தானையில் இருந்து 8 KM தொலைவில் மதவாச்சி செல்லும் பாதையில் இருக்கும் இப்பகுதிக்கு ஞாயிறு மற்றும் விடுமுறை நாட்களில் போக்குவரத்து சேவைகள் இடம் பெறாததால் பயணிகள் மிகவும் சிரமப்படுகின்றனர். ஹொறவ்பொத்தானையில் இருந்து முச்சக்கர வண்டியில் இப்பகுதிக்கு வருவதற்கு 750-1000 ரூபாய் அறவிடப்படுகின்றது. அதிக குடியிருப்புக்கள் இல்லத இந்த பகுதிக்கு வருபவர்கள் அங்கிருந்து வேறு ஒரு வாகனத்தில் வெளியே செல்வது உறுதியான விடயம் இல்லை.அதனால் வாகனம் காத்திருந்து அவர்களை மீண்டும் ஏற்றிச்செல்ல வேண்டும். குறித்த பகுதியை பார்ப்பதற்கு கிட்டத்தட்ட ஒரு மணிநேரத்துக்கு மேலாக நேரம் தேவைப்படும். அதுவரை வாகனம் காத்திருந்து மீண்டும் பயணிகளை ஏற்றிச்செல்வதற்கு 2000- 3000 வரை கட்டணம் அறவிடப்படுகின்றது. இதனால் சுற்றுலாத்துறை பாதிக்கப்படுகின்றது.

இது ஒருபுறமிருக்க ஹொறவ்பொத்தானை முதல் மதவாச்சி வரை உள்ள முக்குரபுரம், அங்குநொச்சிய, புல்மொடகடவல உள்ளடங்கலாக இன்னும் பல கிராம மக்களின் போக்குவரத்து மிகவும் பாதிக்கப்படுகின்றது. மருத்துவம், அவசரத் தேவைகளுக்கென ஞாயிறு மற்றும் ஓய்வு நாட்களில் பயணிக்கும் மக்கள் பெரும் பொருளாதார சிக்கல்களை எதிர் கொள்கின்றனர். அடிப்படையிலேயே பொருளாதர மட்டத்தில் பின்தள்ளப்பட்டுள்ள இம்மக்களின் வாழ்க்கை முறையில் இப் போக்குவரத்து பிரச்சனையானது மேலும் அழுத்தமாக இருக்கின்றது.

ஒரு நாட்டினது மட்டுமன்றி மாகாணம், மாவட்டம் பிரதேசம் என அத்தனை பிரிவுகளுக்குமான அபிவிருத்திக்கும் முன்னெற்றத்துக்கும் போக்குவரத்து வசதிகள் முக்கியம் என்பதை கவனத்தில் கொண்டு அரச போக்குவரத்து சேவைகளையாவது சற்று விரிவுபடுத்தினால் அனைவருக்கும் பயனுள்ளதாக இருக்கும்.

ஷாலினி சாள்ஸ்

 

Spread the love
  •   
  •   
  •   
  •   
  •  
  •  
  •  
  •  

Add Comment

Click here to post a comment

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.