இலங்கையின் 71 சுதந்திர தினமான இன்று கிளிநொச்சிக் கந்தசுவாமி கோவில் முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது. யாழ் பல்கலைகழக மாணவர்களின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட இவ் ஆர்ப்பாட்டத்தில் கலந்துகொண்டவர்கள் அரசியல் கைதிகளை விடுதலைச் செய், காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு தீர்வினை வழங்கு, சர்வதேச விசாரணை வேண்டும், நிலங்களை ஆக்கிரமிக்காதே, இராணுவமே வெளியேறு, வடக்கு கிழக்கை பிரிக்காதே, ஒற்றையாட்சி வேண்டாம், இனப்படுகொலைக்கு நீதி வேண்டும், எங்கள் நிலம் எமக்கு வேண்டும் கொலையாளிகளை நீதிபதியாக்கும் 30/1 தீர்மானத்திற்கு மேலும் கால அவகாசம் கொடுத்து நீதியை இழுத்தடிக்காது ஜநா பாதுகாப்புச் சபைக்கு பாரப்படுத்த வேண்டும், தென்னமரவாடியை ஆக்கிரமிக்காதே, வெடுக்குநாறி மலையை விட்டு வெளியேறு, கோப்பாபிலவு மண்ணை உரியவர்களிடம் கொடு, மன்னார் பதைகுழி விவகாரம் சர்வதேச விசாரணை செய், நாட்டின் சுந்திரம் சிங்கள மக்களுக்கு மட்டுதானா போன்ற கோரிக்கைகளும் கோசங்களும் முன் வைக்கப்பட்டு ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டது.
இன்று காலை பத்து முப்பது ஆரம்பமான ஆர்ப்பாட்டம் முற்பகல் 11.30 வரை இடம்பெற்றது. இதில் , பாராளுமன்ற உறுப்பினர்களான சிவசக்தி ஆனந்தன் சி. சிறிதரன், வடக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவி. விக்னேஸ்வரன் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கஜேந்திரகுமார், செல்வராசா கஜேந்திரன், அருந்தவபாலன், சிவாஜிலிங்கம், பல்கலைகழக மாணவர்கள் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் என பலர் கலந்துகொண்டனர்.