சிபிஐ நடவடிக்கைக்கு எதிராக மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜியின் மறியல் போராட்டம் இரண்டாவது நாளாக இன்றும் தொடர்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேற்கு வங்காள மாநிலத்தில் நிதி நிறுவன மோசடி வழக்கு தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி வருகின்ற வழக்கு தொடர்பாக விசாரணை நடத்த கொல்கத்தா மாநகர காவல் ஆணையாளரின் வீட்டுக்கு சிபிஐ அதிகாரிகள் நேற்று மாலை சென்றிருந்தனர்.
அப்போது, அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த காவல்துறையினர் சிபிஐ அதிகாரிகளை உள்ளே செல்ல அனுமதிக்காத நிலையில் ஆணையாளர் வீட்டிற்கு வந்த சிபிஐ அதிகாரிகள் குழுவை காவல் நிலையத்துக்கு அழைத்துச் சென்று விசாரித்த காவல்துறையினர் பின்னர் அவர்களை விடுவித்திருந்தனர்.
இதையடுத்து ஆளுனர் வீட்டுக்கு சென்ற மம்தா பானர்ஜி, அங்கு மாநில டிஜிபி உள்ளிட்ட அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதுடன் மேற்கு வங்காளத்தில் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையில் மோடியும், அமித் ஷாவும் ஈடுபட்டுள்ளதாக குற்றம் சுமத்தியிருந்தார்.
இதனையடுத்து , சிபிஐ நடவடிக்கையை கண்டித்தும், நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை காக்க வலியுறுத்தியும மம்தா பானர்ஜி நேற்று இரவு மறியல் போட்டத்தினை ஆரம்பித்துள்ளார்.
அவரது போராட்டம் இன்றும் நீடிக்கின்ற நிலையில் அங்கு திரிணாமுல் காங்கிரஸ் தொண்டர்கள் குவிந்தவண்ணம் உள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது