இளைய தலைமுறையினரை வசியப்படுத்தி வன்மத்தை விதைக்கும் ‘பப்ஜி’ வகையிலான இணையதள விளையாட்டுகளை மத்திய, மாநில அரசுகள் தடை செய்ய வேண்டும் என கல்வியாளர்கள் மற்றும் உளவியல் நிபுணர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
தென்கொரியாவின் பட்டில் ராய்லி என்ற நாவலைத் தழுவி பப்ஜி இணைய தளவிளையாட்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதில் 100 நபர்கள் ஒரு தீவில் இறக்கிவிடப்படுவார்கள். அந்தத் தீவில் துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் இருக்கும். அதைப் பயன்படுத்தி கடைசிவரை யார் உயிருடன் உள்ளனரோ அவர்களே வெற்றி பெற்றவர்களாவர்.
2017-ம் ஆண்டு அறிமுகமான பப்ஜி இப்போது உலக அளவில் அதிக வாடிக்கையாளர்களைக் கொண்டுள்ள விளையாட்டாகத் திகழ்கிறது. இந்தியாவில் 7 மாதத்தில் 20 கோடிக்கும் அதிகமானவர்கள் பப்ஜி விளையாட்டுக்கு மாறியுள்ளனர் எனவும் முழுவதும் ரத்தம் தெறிக்கும்படி அமைந்துள்ள பப்ஜி விளையாட்டினை பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களில் 80 சதவீதம் பேர் விளையாடுவதாகவும் ஆய்வுகள் கூறுகின்றன.
இதை விளையாடும் பெரும்பாலான நபர்கள் போதைப்பழக்கத்துக்கு நிகராக அடிமையாகிவிடுகின்றனர் எனவும் பப்ஜி ரசிக்கும்படி இருந்தாலும் வன்முறை, கொலை, ஆக்கிரமிப்பு, கொள்ளை ஆகிய தவறான செயல்களை ஊக்குவிப்பதாக உள்ளதால் தடை செய்ய வேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே குஜராத்மாநிலத்தில் பப்ஜி தடை செய்யப்பட்டுள்ள நிலையில் அதேபோன்று தமிழகம் உட்பட நாடு முழுவதும் பப்ஜியை தடை செய்ய வேண்டும் என நிபுணர்கள் கோரியுள்ளனர்.
இதனைத்தவிர்க்க பிள்ளைகளுக்கு ஸ்மார்ட்போன் வழங்குவதனை பெற்றோர் நிறுத்த வேண்டும் எனவும் இதன் பாதிப்புகள் குறித்து மாணவர்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ள ஆர்வலர்கள் இந்த விளையாட்டை தடை செய்வதே நிரந்தரத் தீர்வாக அமையும் எனவும் தெரிவித்துள்ளனர்.