புதுவையில் மோசமான அரசியல் சூழ்நிலை நிலவுவதால் மத்திய அரசு உடனடியாக தலையிட்டு ஆளுனரை மாற்ற வேண்டும் என அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு சபாநாயகர் வைத்திலிங்கம் கடிதம் அனுப்பியுள்ளார்.
புதுச்சேரியில் ஆளுநருக்கு எதிராக முதலமைச்சர் நாராயணசாமி நடத்தும் போராட்டம் 3வது நாளாக நீடிக்கும் நிலையில், மாநிலத்திற்கு இடைக்கால நிர்வாகியை நியமிக்க வேண்டும் என சபாநாயகர் கேட்டுக்கொண்டுள்ளார்.
புதுச்சேரியில் ஆளுனராக கிரண்பேடி பொறுப்பேற்றதில் இருந்து அவருக்கும், முதலமைச்சர் நாராயணசாமி தலைமையிலான அரசுக்கும் இடையிலான பனிப்போர் இப்போது உச்சகட்டத்தை அடைந்துள்ளது.
இருசக்கர வாகனங்களில் செல்வோர் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்ற சட்டத்தை காவல்துறையினர் கட்டாயம் அமுல்படுத்த வேண்டும் என ஆளுனர் கிரண்பேடி உத்தரவிட்டதற்கு கடும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது.
இந்தவிவகாரம் பெரும் கொந்தளிப்பு ஏற்படுத்தியதை தொடர்ந்து முதலமைச்சர் நாராயணசாமி, அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுடன் இணைந்து ஆளுனர் மாளிகையை முற்றுகையிட்டு இன்று 3வது நாளாக இ போராட்டம் நீடிக்கிறது.
இதனையடுத்து ஆளுநர் மாளிகை வளாகம் போராட்டக்களமாக மாறியிருப்பதால், அதிவிரைவு அதிரடிப்படை, துணை ராணுவம் மற்றும் தொழில் பாதுகாப்புப்படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில், புதுச்சேரி சபாநாயகர் வைத்திலிங்கம், உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்கிற்கு அனுப்பியுள்ள அவசர கடிதத்தில் புதுச்சேரியில் தற்போது அசாதாரண சூழல் நிலவுவதால் இடைக்கால நிர்வாகியை நியமிக்கவேண்டும் என குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது