குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மாவட்ட அபிவிருத்தித்திட்டங்கள் தொடர்பான மீளாய்வு கூட்டம் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (15) வெள்ளிக்கிழமை மாலை 2.45 மணியளவில் மாவட்டச் செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸின் ஒருங்கிணைப்பில் இடம் பெற்ற கூட்டத்திற்கு அமைச்சர்களான றிஸாட் பதியுதீன்,வஜீர அபேவர்த்தன, ஹரிசன், இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன், வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.
மேலும் பிரதேசச் செயலாளர்கள்,நகரசபை பிரதேச சபைகளின் செயலாளர்கள்,உள்ளுராட்சி மன்றங்களின் தவிசாளர்கள்,உப தவிசாளர்கள்,உறுப்பினர்கள், திணைக்கள அதிகாரிகள்,படை அதிகாரிகள் என பலர் கலந்து கொண்டிருந்தனர்.
-இதன் போது பல்வேறு அபிவிருத்;தித்திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டது. -மீன்பிடி, போக்குவரத்து, குடிநீர், வீதி அபிவிருத்தி, கல்வி, சுகாதாரம், விவசாயம், வைத்திய சேவை உற்பட பல்வேறு திட்டங்கள் தொடர்பாக மீளாய்வு செய்யப்பட்டதோடு, பூர்த்தியாகாத திட்டங்கள் தொடர்பாகவும் ஆராயப்பட்டது.
குறிப்பாக பல்வேறு கிராமங்களுக்கான குடி நீர் இணைப்பு வழங்கப்பாடமையினால் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து ஆராயப்பட்டது.
மேலும் மன்னார் மாவட்டத்தில் படையினர் வசம் உள்ள காணிகள் குறித்தும்,விடுவிக்கப்படாத காணிகள் தொடர்பாகவும் ஆராயப்பட்டதுடன் வன வளப்பாதுகாப்பு மற்றும் தொல்பொருள் திணைக்களம் ஆகியவை எல்லை இட்டு வைத்துள்ள அரச மற்றும் பொது மக்களின் காணிகள் விடுவிக்கப்படாமை தொடர்பாகவும் விரிவாக ஆராயப்பட்டது.
இந்தநிலையில் படையினர் வசம் உள்ள விடுவிக்கப்பட வேண்டிய மக்களின் காணிகளை விடுவிப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளுவதாக பிரதமர் தெரிவித்தார்.
இதே வேளை மன்னார் பள்ளிமுனை கிராமத்தில் வீட்டுத்திட்டங்களுக்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அடிக்கல் நாட்டும் நிகழ்வு இடம் பெற ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டிருந்த போதும் இறுதி நேரத்தில் பிரதமர் உள்ளிட்ட அமைச்சர்களும் சமூகமளிக்கவில்லை.
இதனைத் தொடர்ந்து மன்னார் பிரதேச செயலாளர் சிவசம்பு கனகம்பிகை தலைமையில் தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன்,சாள்ஸ் நிர்மலநாதன் , மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் சி.ஏ.மோகன்ராஸ் பிரதமரின் செயலாளர் சிவஞான சோதி, உள்ளுராட்சி மற்றும் உள்நாட்டு அலுவல்கள் அமைச்சின் செயலாளர் கமல் பத்மசிறி, ஆகியோர் இணைந்து முதற்கட்டமாக இரண்டு வீடுகளுக்கான அடிக்கல்லினை நாட்டி வைத்துள்ளனர்.