ஐபிஎல் ஆரம்ப விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கான தொகை புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த ராணுவ வீரர்களின் குடும்பங்களுக்கு நன்கொடையாக வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 14ம் திகதி புல்வாமா பகுதியில் இடம்பெற்ற தற்கொலைத்தாக்குதலில் 40 ராணுவ வீரர்கள் உயிரிழந்திருந்தனர்.
இதனையடுத்து இங்கிலாந்தில் மே மாதம் ஆரம்பமாகவுள்ள உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியை இந்தியா புறக்கணிக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகின்ற நிலையில் பாகிஸ்தான் உலகக்கிண்ணத் தொடரில் பங்கேற்பதற்கு தடைவிதிக்க வேண்டும் என பிசிசிஐ , ஐசிசியிடம் கோரிக்கை விடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்நிலையில் நேற்றையதினம் நடைபெற்ற நிர்வாகக்குழுக் கூட்டத்தின் போது மார்ச் 23ம் திகதி நடைபெறவிருந்த ஐபிஎல் தொடக்க விழா கொண்டாட்டம் ரத்து செய்யப்பட்டு , அதற்காக ஒதுக்கப்படும் நிதி மரணமடைந்த வீரர்களின் குடும்பத்திற்கு வழங்கப்படும் என முடிவு எடுக்கப்பட்டதாக நிர்வாகக் குழுத் தலைவர் வினோத் ராய் தெரிவித்துள்ளார்.