காணாமல்போனவர்களின் உறவினர்களால் பெப்ரவரி 25ஆம் திகதி திங்கட்கிழமை முன்னெடுக்கப்படவுள்ள போராட்டத்துக்கு தமிழ் மக்கள் பேரவை தனது பூரண ஆதரவைத் தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் தமிழ் மக்கள் பேரவை விடுத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
தமிழ் மக்களாகிய நாம் முக்கியமான காலகட்டத்தில் இருக்கின்றோம். இலங்கையில் நடந்த தமிழின அழிப்புத் தொடர்பில் ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தில் ஆராயப்பட இருக்கின்ற இவ்வேளையில் நாம் அனைவரும் ஒன்றுபட்டு எங்களின் ஒருமித்த நிலைப்பாட்டடை ஒரே குரலில் கூறவேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது.
இவ்வாறு நாம் அனைவரும் ஒருமித்த குரலில் எங்களின் உறுதியான நிலைப்பாட்டை வெளிப்படுத்துவதன் மூலமாகவே சர்வதேச சமூகத்தின் பார்வையை எங்கள் பக்கம் திருப்ப முடியும்.
ஐ.நா மனித உரிமை ஆணையம் விதித்த நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்குக் கால அவகாசத்தைப் பெற்றுக் கொண்ட இலங்கை அரசு எந்த நடவடிக்கையையும் இதுவரை எடுக்கவில்லை.
மாறாக தொடர்ந்தும் கால அவகாசம் கோருவதையே தனது நிலைப்பாடாகக் கொண்டுள்ளது. இவ்வாறு காலஅவகாசம் கொடுக்கப்பட்டால் அது தமிழர்களின் அபிலாசைகளை நீர்;த்துப் போகச் செய்யும். எனவே எங்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதில் தமிழ் மக்களாகிய நாம் எவ்வளவு உறுதியாக இருக்கின்றோம் என்பதை சர்வதேச சமூகத்துக்கு எமது ஒருமித்த எழுச்சி மூலமாகக் காட்ட வேண்டும்.
ஆகையால் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் 25ஆம் திகதி திங்கட்கிழமை முன்னெடுக்கவுள்ள பாரிய போராட்டத்துக்கு அனைத்துத் தமிழ் மக்களும் தங்களின் பூரண ஒத்துழைப்பை வழங்க வேண்டும் என தமிழ் மக்கள் பேரவை அன்புரிமையுடன் வேண்டி நிற்கின்றது.
தமிழ் மக்கள் பேரவை