பாகுபலி படத்தின் வெற்றியை தொடர்ந்து, ராஜமவுலி இயக்கும் புதிய திரைப்படத்தில் பிரபல பொலிவுட் நடிகர் அஜய் தேவ்கன் நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார்.
‘பாகுபலி’ திரைப்படத்திற்குப் பின்னர், ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் நடிக்கும் படத்தை இயக்கி வருகின்றார் ராஜமவுலி. முதல்கட்டப் படப்பிடிப்பில் பிரம்மாண்டமான சண்டைக் காட்சி ஒன்றை படமாக்கினார். சுமார் 300 கோடி ரூபாய் செலவிட்டு உருவாகும் இப்படத்தை டி.வி.வி. தான்யா தயாரித்து வருகின்றார்.
ராம்சரண் சம்பந்தப்பட்ட காட்சிகளின் படப்பிடிப்பு தற்போது நடைபெற்று வருகின்றது. இந்நிலையில், இப்படத்தில் முக்கியமான கௌரவ கதாபாத்திரத்தில் ஹிந்தி திரையுலகின் முன்னணி நடிகர் அஜய் தேவ்கன் நடிக்கவுள்ளார். இதற்கான படப்பிடிப்பு விரைவில் நடைபெறவுள்ளது. ‘இந்தியன் 2’ படத்தில் நடிக்க மறுத்த அஜய் தேவ்கன், ராஜமவுலி இயக்கும் படத்தை இணங்கியுள்ளார்.
கௌரவ கதாபாத்திரம் தான் என்பதால் மாத்திரம் ஒப்புக் கொண்டுள்ளதாக அஜய் தேவ்கன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ‘நான் ஈ’ இந்தி பதிப்புக்கு பின்னணிக் குரல் கொடுத்தவர் அஜய் தேவ்கன். அந்த படத்திலிருந்தே ராஜமவுலி, அஜய் தேவ்கன் இருவரும் நட்புக் கொண்டுள்ளனர்.