வடக்கின் போர் என வர்ணிக்கப்படும் யாழ்.மத்திய கல்லூரிக்கும் பரியோவான் கல்லூரிக்கும் இடையிலான நூற்றாண்டு துடுப்பாட்ட போட்டியின் இரண்டாம் நாள் போட்டி முடிவில் பரியோவான் கல்லூரி அணி 39 பந்து பரிமாற்றத்தில் 121 ஓட்டங்களை இழப்பின்றி பெற்றுக்கொண்டுள்ளது.
இரு கல்லூரிகளுக்கும் இடையிலான 113ஆவது ஆண்டு துடுப்பாட்ட போட்டி நேற்று வியாழக்கிழமை காலை ஆரம்பமானது. நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற மத்திய கல்லூரி களத்தடுப்பை தெரிவு செய்ததனை அடுத்து பரியோவான் கல்லூரி துடுப்பெடுத்தாடியது.
முதல் நாள் போட்டியில் மத்திய கல்லூரியின் பந்து வீச்சுக்கு முகம் கொடுக்க முடியாது திணறிய பரியோவான் கல்லூரி சீரான இடைவெளியில் தனது இலக்குகளை இழந்தது.
இருந்த போதிலும் தெ. டினோசன் நிலைதாடி அணியின் ஓட்ட எண்ணிக்கையை அதிகரித்து கௌரவமான இலக்கை நோக்கி அணியை கொண்டு சென்றார். அவருடன் இணைந்து அபினாஸ் ஆடினார். டினோசன் 134 பந்துகளுக்கு முகம் கொடுத்து 98 ஓட்டங்களை எடுத்த நிலையில் , வி.விஜய்ஸ்காந்தின் பந்து வீச்சில் இ.ராஜ்கிளின்ரனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார்.
அபினாஸ் 28 பந்துகளுக்கு முகம் கொடுத்து 24 ஓட்டங்களை எடுத்த நிலையில், வி.விஜய்ஸ்காந்தின் பந்து வீச்சில் ப.இந்துஜனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். அதனை தொடர்ந்து பரியோவான் கல்லூரி 181 ஓட்டங்களுக்கு தனது அனைத்து இலக்குகளை இழந்தன.
மத்திய கல்லூரி அணியில் பந்து வீசிய க.இயலரசன் 15 பந்து பரிமாற்றங்களில் இரண்டு ஓட்டமற்ற பந்து பரிமாற்றத்தை வீசினார். 54 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 5 இலக்குகளை சரித்தார். வி.விஜய்ஸ்காந்த் 11.5 பந்து பரிமாற்றத்தில் 3 ஓட்டமற்ற பந்து பரிமாற்றத்தை வீசி 43 ஓட்டங்களை விட்டுக்கொடுத்து 3 இலக்குகளை சரித்தார். செ. மதுசன் மற்றும் க.பிரவீன்ராஜ் ஆகியோர் தலா ஒரு இலக்குகளை சரித்தனர்.
அதனை அடுத்து பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மத்திய கல்லூரி அணி ஆரம்பத்தில் இலக்குகளை இழந்து தடுமாறிய போதும் , க.இயலரசன் நிலைத்தாடி 239 பந்துகளுக்கு முகம் கொடுத்து 77 ஓட்டங்களை பெற்ற நிலையில் , ஈ . தனுசனின் பந்து வீச்சில் க. சபேசனிடம் பிடிகொடுத்து ஆட்டமிழந்தார். வி.விஜய்ஸ்காந்த் அதிரடியாக ஆடி 31 பந்துகளுக்கு முகம் கொடுத்து 41 ஓட்டங்களை பெற்ற நிலையில் ஹேமதுசனின் பந்து வீச்சில் இலக்கை இழந்தார். அந்நிலையில் மத்திய கல்லூரி அணி 195 ஓட்டங்களுக்கு தனது அனைத்து இலக்குகளையும் இழந்தன.
பரியோவான் கல்லூரி சார்பில் பந்து வீசிய அ. சரண் 20 பந்து பரிமாற்றத்தில் 4 ஓட்டமற்ற பந்து பரிமாற்றத்தை வீசி 54 ஓட்டங்களை விட்டுகொடுத்து 3 இலக்குகளை சரித்தார். தெ.டினோசன், ம.ஹேமதுசன் மற்றும் டி.எல்சன் ஆகியோர் தலா 2 இலக்குகளை சரித்தனர்.மு. அபினாஸ் ஒரு இலக்கையும் சரித்தார்.
மத்திய கல்லூரி அணி 14 ஓட்டங்களை மேலதிகமாக பெற்ற நிலையில், பரியோவான் கல்லூரி இன்று இரண்டாம் நாள் துடுப்பெடுத்தாடியது. ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக ந. சௌமியன் மற்றும் சி.தனுஜன் ஆகியோர் களமிறங்கி நிலைத்தாடினார்கள். சௌமியன் 104 பந்துகளுக்கு முகம் கொடுத்து 46 ஓட்டங்களை பெற்றுகொண்டார். சி. தனுஜன் 132 பந்துகளுக்கு முகம் கொடுத்து 57 ஓட்டங்களை பெற்றுக்கொண்டார்.
இந்தநிலையில் இன்றைய இரண்டாம் நாள் போட்டி முடிவில் பரியோவான் கல்லூரி அணி 39 பந்து பரிமாற்றத்தில் .121 ஓட்டங்களை இலக்குகள் இழப்பின்றி பெற்றுக்கொண்டுள்ளது.