வரவு செலவுத்திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு, 43 மேலதிக வாக்குகளால் இன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு-செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 119 வாக்குகளும், எதிராக 76 வாக்குகளும் கிடைத்துள்ளன.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ் முற்போக்கு கூட்டணி ஆகியன வரவு செலவுத்திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ள நிலையில் ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பு மற்றும் மக்கள் விடுதலை முன்னணி ஆகியன எதிராகவும் வாக்களித்துள்ளன. அத்துடன் மகிந்தவுக்கு ஆதரவாக இருந்த இலங்கைத் தொழிலாளர் காங்கிரஸ் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்துள்ளமை குறிப்பிடத்தக்கது்
இந்த வரவு செலவு திட்டமானது நிதியமைச்சர் மங்கள சமரவீரவினால் கடந்த ஐந்தாம் திகதி பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதங்கள் கடந்த 6ஆம் திகதி ஆரம்பமாகி, இன்று வரை நடைபெற்றன.
அதேவேளை நாளை முதல், எதிர்வரும் ஏப்ரல் மாதம் 5ஆம் திகதி வரை அமைச்சுகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பான குழுநிலை விவாதங்கள் நடைபெற்று ஏப்ரல் ஐந்தாம் திகதி இறுதி வாக்கெடுப்பு இடம்பெறும் என்பது குறிப்பிடத்தக்கது.