திமுக முன்னாள் அமைச்சரான மறைந்த கோ.சி.மணியின் மகன் அன்பழகனுக்கு பண மோசடி வழக்கில் ஏழு ஆண்டுகள் சிறை தண்டனையும் ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதித்து சென்னை சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது
பணமதிப்பழப்பு நடவடிக்கையின் பின்னர் 2017 ஆம் ஆண்டு சென்னையில் எட்டு இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையின் போது இலத்திரனியல்; பொருட்கள் ஏற்றுமதி இறக்குமதி நிறுவனங்களின் பெயர்களில் ஹொங்காங் போன்ற நாடுகளுக்கு 80 கோடி ரூபாய் அனுப்பப்பட்டு மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்த மோசடியில் சென்னையைச் சேர்ந்த லியாகத் அலி, இலியாஸ் பீர் முகமது ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு லியாகத் அலி கைது செய்யப்பட்டு அவரிடம் மேற்கொண்ட விசாரணையின் அடிப்படையில், போலி நிறுவனங்களுக்கான போலி ஆவணங்களை உருவாக்குவதில் மணி அன்பழகனுக்குத் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டு அவர் கைது செய்யப்பட்டார்.
வழக்கு தொடர்ந்து நடந்து வந்த நிலையில் நேற்று மணி அன்பழகன் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் பண மோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் 78 கோடி ரூபாயை வெளிநாடுகளுக்கு போலி நிறுவனங்கள் மூலம் போலி ஆவணங்கள் மூலம் மாற்றியது அமுலாக்கத் துறையால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளதனால் அன்பழகனுக்கு ஏழு ஆண்டுகள் சிறையும், ஒரு கோடி ரூபாய் அபராதமும் விதிக்கப்படுகிறது என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து உடனடியாக அன்பழகன் புழல் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.