போலி என்கவுன்டரில் கொல்லப்பட்டவரின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபா இழப்பீடு வழங்குமாறு தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தைச் சேர்ந்த சுந்தரமூர்த்தி என்பவர் 2009ஆம் ஆண்டு என்கவுன்டரில் சுட்டுக் கொல்லப்பட்ட நிலையில் போலி என்கவுன்டரில் தன் கணவரைக் கொன்றதாக சுந்தரமூர்த்தியின் மனைவி தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையகத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார்.
அத்துடன் இந்தச் சம்பவத்தில் தொடர்புடைய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்திருந்தார். இந்த மனுவை விசாரித்த ஆணையக நீதிபதி கொல்லப்பட்டவரின் உடலை பரிசோதனை செய்த மருத்துவர்கள் அளித்த சாட்சியங்களை மேற்கொள் காட்டி, இது போலி என்கவுன்டர் என்பதை உறுதி செய்ததுடன் சம்பவத்தில் தொடர்புடைய நான்கு காவலர்களையும் உடனடியாக பணியிடை நீக்கம் செய்யவும், அவர்கள் மீது குற்ற நடவடிக்கை எடுக்கவும் அரசுக்குப் பரிந்துரை செய்தார்.
மேலும், பாதிக்கப்பட்ட சுந்தரமூர்த்தியின் குடும்பத்துக்கு 10 லட்சம் ரூபாயை இழப்பீடாக வழங்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.