அருகருகே உள்ள மூன்று தெற்கு ஆபிரிக்க நாடுகளான மொசாம்பிக், சிம்பாப்வே மற்றும் மலாவி ஆகிய நாடுகளில் இடாய் புயலின் தாக்கம் காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 300 தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் 350,000 பேர் ஆபத்திலிருப்பதாக மொஸாம்பிக் ஜனாதிபதி பிலிப் நையுசி தெரிவித்துள்ளார்.
இந்நிலையில், இடாய் புயலின் தாக்கத்தினால் மலாவியில் மனிதாபிமான நெருக்கடியொன்று ஏற்பட்டதாகத் தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள், மில்லியன் கணக்கானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், 80,000க்கும் மேற்பட்டோர் அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேறியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது
இடாய் புயல் தாக்கிய நான்கு நாட்களுக்குப் பின்னரும் மத்திய மொஸாம்பிக்கில், கூரைகளிலும் மர உச்சிகளிலுமுள்ள உயிர் தப்பித்தவர்களை படகுகள், ஹெலிகொப்டர்கள் மூலம் அவசரகால அணிகள் மீட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மொஸாம்பிக்கில் தேசிய அவரசகாலநிலையொன்றை அரசாங்கம் பிரகடனப்படுத்தியுள்ளதாகவும் மூன்று நாள்கள் துக்க தினமாக அனுஷ்டிக்கவுள்ளதாகவும் அந்நாட்டு ஜனாதிபதி பிலிப் நையுசி தெரிவித்துள்ளார்.
அத்துடன், சிம்பாப்வேயில் குறைந்தது 217 பேரைக் காணவில்லை எனவும் 44 பேர் மீட்க முடியாத அளவில் சிக்கியுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்