குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
போதைப்பொருள் குற்றச்சாட்டு உள்ளிட்ட பல வழக்குகளில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள தனது மகனுக்கு வழங்குவதற்காக ஹெரோயின் போதைப்பொருளை வாழைப்பழத்துக்குள் மிக நுட்பமாக மறைத்து கடத்த முற்பட்ட தாயார் சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவில் விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளார்.
போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த குற்றச்சாட்டில் யாழ்ப்பாணம் திருநகரைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் நீதிமன்றின் உத்தரவில், யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார். அவருக்கு எதிராக சைக்கிள் திருட்டுக் குற்றச்சாட்டு வழக்குகள் பல நிலுவையில் உள்ளன.
சந்தேகநபரை கடந்த திங்கட்கிழமை பார்வையிடச் சென்ற அவரது தாயார், புகையிலை நறுக்குக்குள் சிறியளவு ஹெரோயின் போதைப் பொருளைச் சுற்றி அதனை வாழைப்பழத்துக்குள் நுட்பமாகச் செலுத்தி எடுத்துச் சென்றுள்ளார். வாழைப்பழத்தை சோதனை செய்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், போதைப்பொருள் சுற்றப்பட்ட புகையிலை நறுக்கை மீட்டுள்ளனர்.
அதனால் சந்தேகநபரின் தாயாரைக் கைது செய்த சிறைச்சாலை உத்தியோகத்தர்கள், அவரை யாழ்ப்பாணம் காவல்துறையினரிடம் ஒப்படைத்த நிலையில் காவல்துறையினர் விசாரணைகளின் பின்னர், வயோதிப் பெண்ணை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் செவ்வாய்க்கிழமை முற்படுத்தினர்.
அதன் போது , மகனை நல்வழிப்படுத்துவதற்கு முன்மாதியாக இருக்கவேண்டிய தாயார் இவ்வாறு நடந்துகொள்ளலாமா? போதைப்பொருள் குற்றச்சாட்டில் ஏற்கனவே சிறையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள அவருக்கு மீளவும் போதைப்பொருளை எடுத்துச் சென்று வழங்குவது மகனை குற்றம் செய்யத் தூண்டுவதாகவே உள்ளது என்று எச்சரித்த யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.எஸ்.பீற்றர் போல், சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.
இதேவேளை, சிறைச்சாலையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள மகனை கடந்த சில தினங்களுக்கு முன்னர் பார்க்கச் சென்ற தாயார் ஒருவர், உணவுப் பொதியில் கஞ்சா போதைப் பொருளை எடுத்துச் சென்றார் எனக் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார். பின்னர் அவர் அடுத்த தவணையின் போது குற்றத்தை ஏற்றுக்கொண்டதால் 10 ஆயிரம் ரூபா தண்டம் அறவிடப்பட்டு எச்சரிக்கையின் பின் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.