கிளிநொச்சி நகரிலுள்ள பிரபல உணவகம் தொடர்பிலான வழங்கில் எதிர்வரும் 5ம் திகதி முன்னிலையாகுமாறு வடமாகாண ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவனுக்கு கிளிநொச்சி நீதவான் எம்.கணேசராஜா இன்று 29.03.2019 வெள்ளிக்கிழமை அறிவித்தல் வழங்க உத்தரவிட்டுள்ளார்.
கடந்த செவ்வாய்க்கிழமை குறித்த உணவகத்திலிருந்து கிளிநொச்சி செயலகத்தில் நடைபெற்ற கூட்டமொன்றிற்கு வழங்கப்பட்ட மதிய உணவில் சிறிய புழு ஒன்று காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்ட புகாரின் பெயரில் அன்றைய தினம் பிற்பகல் இவ்வழக்கு கிளிநொச்சி நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டது.
உணவுச் சட்டத்தின் கீழ் கரைச்சிப் பிரதேச சுகாதார பரிசோதகர் திரு.ரி.நிசாந்தன் வழக்கைத் தாக்கல் செய்தார். சந்தேசநபரான உணவக முகாமையாளர் நீதிமன்றில் முன்னிலையாகியிருந்தார்
உணவகத்தைச் சுத்தப்படுத்தி சுகாதார ஏற்பாடுகளைச் சீர்செய்து பொதுச்சுகாதார பரிசோதகரின் அறிக்கையைப் பெற்றுக்கொள்வதற்காக உணவகம் இன்று வெள்ளிக்கிழமை வரை இயங்கக் கூடாது என நீதவான் உத்தரவிட்டிருந்தார்.
முகாமையாளரும் ஆள்பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார். இந்தநிலையில் இன்று வெள்ளிக்கிழமை வழக்கு மீண்டும் எடுத்துக்கொள்ளப்பட்ட போது சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகள் பூர்த்திசெய்யப்படவில்லை எனத் தெரிவித்து வழக்கு தொடுநர் தரப்பின் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது.
அச்சந்தர்ப்பத்தில் சந்தேகநபரின் சார்பில் சட்டத்தரணிகள் திருமதி.எஸ்.விஜயராணி, எஸ்.ரி.அருச்சுனா, திருமதி.சர்மா ஆகியோரின் அனுசரணையுடன் முன்னிலையாகியிருந்த சிரேஷ்ட சட்டத்தரணி என்.ஸ்ரீகாந்தா முறையீடு ஒன்றைத் தெரிவித்து சமர்ப்பணங்களைச் செய்தார்.
நீதிமன்றின் உத்தரவின் பெயரில் கடந்த செவ்வாய்க்கிழமை மாலையே உணவகம் பூட்டப்பட்டது என தெரிவித்த சட்டத்தரணி அன்றிரவு 8 மணியளவில் சில காவல்துறைஅதிகாரிகள் உணவகத்திற்கு வந்தார்கள் என்றும் அவர்களைத் தொடர்ந்து வடமாகாண ஆளுநர் அங்கு வருகைதந்தார் என்றும் குறிப்பிட்டார்.
சுமார் அரை மணித்தியாலங்களுக்கு மேலாக குறித்த உணவகத்தில் ஆளுநர் ஒரு நாட்டாமை போல நடந்துகொண்டார் எனவும் ஒரு காட்டுத் தர்பார் அங்கு அவரால் நடாத்தப்பட்டதென்றும் குற்றஞ்சாட்டிய சட்டத்தரணி ஸ்ரீகாந்தா ஆளுநரின் நடத்தை சட்டவிரோதமானது மாத்திரமன்றி இந்நீதிமன்றின் அதிகார எல்லைக்குள் ஊடுருவிய ஓர் பாரதூரமான விவகாரம் என்றும் தெரிவித்தார்.
இந்தச் சம்பவம் சமூக வலைத்தளங்களில் வெளியாகியதாகவும் குறிப்பிட்டார். நீதிமன்றின் முன்னால் உள்ள வழக்கு ஒன்றுடன் தொடர்புடைய உணவகத்தில் தலையீடு செய்வதற்கு ஆளுநர் யார் என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.
சட்டமன்றம், நிர்வாகம், நீதித்துறை என அரசியல் சாசனத்தின் கீழ் ஆட்சிமுறை மூன்று பிரிவுகளாக அமைக்கப்பட்டிருப்பது ஒரு நிர்வாக அதிகாரியான ஆளுநர் நீதிமன்றத்துடன் உரசிப்பார்க்கின்றார் எனவும் அவர் விமர்சித்தார்.
ஆட்சிமுறையின் கீழ் ஒவ்வொரு துறையும் தனக்குரியதைச் செய்யவேண்டும். குதிரையின் வேலையை எருதோ கழுதையோ செய்ய முடியாது. அதேநேரத்தில் ஒரே உறைக்குள் இரண்டு வாட்கள் இருக்க முடியாது.
நீதித்துறையின் சுயாதீனத்திலும் சுதந்திரத்திலும் எவரும் தலையீடு செய்ய முடியாது. இது மிகப் பாரதூரமான விடயம். இதனை கைகட்டி மௌனமாகப் பார்க்க முடியாது. இவ்விடயத்தில் நீதிமன்றின் கௌரவத்தை பாதுகாக்கும் கடமைப்பாடு சட்டத்தரணிகளாகிய எங்களுக்கும் உண்டு. அதற்குப் பிறகுதான் வழக்கின் ஏனைய விடயங்கள் என்று சட்டத்தரணி தெரிவித்தார். நீதிமன்று ஆளுநரின் நடத்தை தொடர்பில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று அவர் விண்ணப்பித்தார்.
இதனை அடுத்து எதிர்வரும் 5ம் திகதி வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனை குறித்த வழக்கில் நீதிமன்றில் முன்னிலையாகுமாறு அவருக்கு அறிவித்தல் வழங்க நீதவான் கட்டளையிட்டார்.
அதேவேளை குறித்த உணவகத்தின் பொதுச்சுகாதார பரிசோதகரின் சுகாதார ஏற்பாடுகளை நிறைவுசெய்வதற்காக எதிர்வரும் திங்கட்கிழமை வரை குறித்த உணவகம் இயங்கக் கூடாது என்றும் நீதவான் கட்டளையிட்டார்.