போலி வருமான வரி அதிகாரிகள் தொடர்பில் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு வருமான வரித் துறை சார்பில் கோரிக்கை தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல் துறை அதிகாரிகள், தேர்தல் பறக்கும் படையினர் போன்று நடித்து, மக்களை ஏமாற்றிப் பணம் பறிப்பது சமீபகாலமாக அதிகரித்து வருகின்ற நிலையில் வருமான வரித் துறை அதிகாரிகள் போல நடித்துப் பணம் மற்றும் நகைகளை கொள்ளையடிக்கும் சம்பவங்களும் இடம்பெற்று வருகின்ற நிலையில் பொதுமக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில், நேற்றையதினம் சென்னை வருமான வரித் துறை கூடுதல் ஆணையகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் போலி அதிகாரிகளிடம் ஏமாற வேண்டாம் எனவும், சோதனை நடத்த வருபவர்கள் குறித்துச் சந்தேகம் எழுந்தால் தங்களைத் தொடர்பு கொள்ளலாம் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் சோதனை நடத்த வருபவர்கள் மீது பொதுமக்களுக்குச் சந்தேகம் ஏற்பட்டால், அவர்களுடைய துறை சார்ந்த அடையாள அட்டையைக் காண்பிக்குமாறு கேட்டு, அவர்கள் வருமான வரித் துறையைச் சார்ந்தவர்கள் தானா என்பதை உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது