லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக ஐ.ஏ.எஸ். அதிகாரி உட்பட 2 பேரை நியமித்த உத்தரவுக்கு மதுரை உயர்நீதிமன்ற தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.
கரூரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர் மதுரை உயர்நீதிமன்றில் தாக்கல் செய்த மனுவில் நம் நாட்டில் ஊழலை முழுவதும் ஒழிக்கும் வகையில் லோக் ஆயுக்தா சட்டம் 2013-ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது. முதல்-அமைச்சர், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் ;, அரசு ஊழியர்கள் என யாராக இருந்தாலும் அவர்கள் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் கூறப்பட்டால் முறையாக விசாரிப்பது லோக் ஆயுக்தாவின் கடமை. தமிழகத்தில் கடந்த ஆண்டு நடைமுறைக்கு வந்த இந்த அமைப்பின் தலைவராக உயர்நீதிமன்ற நீதிபதி அல்லது ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையில் 25 ஆண்டு பணியாற்றிய அனுபவம் உள்ளவரை நியமிக்க வேண்டும்.
4 உறுப்பினர்களில் சட்டத்துறையைச் சேர்ந்த 2 பேரையும், பிற துறைகளில் பணியாற்றிய 2 பேரையும் நியமிக்க வேண்டும்.
இந்த நிலையில் லோக் ஆயுக்தாவின் தலைவராக ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி தேவதாசுடன் சட்டத்துறையை சேர்ந்த 2 உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற மாவட்ட நீதிபதிகள் இருவரும் சட்டத்துறையை சேராத உறுப்பினர்களாக ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம் என்பவரும், மற்றொரு உறுப்பினராக ஆறுமுகம் என்பவரும் நியமிக்கப்பட்டுள்ளதாக கடந்த 1-ந் திகதி அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதில் ராஜாராம், ஆறுமுகம் ஆகியோரின் நியமனத்தில் விதிகள் பின்பற்றப்படவில்லை. எனவே அவர்களின் நியமனத்தை ரத்து செய்து உத்தரவிட வேண்டும் என தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த நிலையில் ஓய்வுபெற்ற ஐ.ஏ.எஸ். அதிகாரி ராஜாராம், அ.தி.மு.க.வில் உள்ள ஆறுமுகம் ஆகியோர் விதிகளுக்கு புறம்பாக நியமிக்கப்பட்டுள்ளதனால் அவர்கள் 2 பேரையும் லோக் ஆயுக்தா உறுப்பினர்களாக நியமனம் செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிடப்பட்டுள்ளது