மாலைதீவு பாராளுமன்ற தேர்தலில் முன்னாள் ஜனாதிபதி முகமது நஷீத் மற்றும் தற்போதைய ஜனாதிபதி முகமது சோலி ஆகியோரின் எம்.டி.பி. கட்சி வெற்றிப்பெற்றுள்ளது
மாலைதீவில் நீண்டகால ராணுவ ஆட்சிக்கு பின்னர் கடந்த 2008-ம் ஜனநாயக முறைப்படி ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்று அதில் மாலைதீவு ஜனநாயக கட்சியின் தலைவர் முகமது நஷீத் வெற்றிப்பெற்று ஜனாதிபதியானார். எனினும் பொதுமக்கள் போராட்டம் மற்றும் ராணுவ நெருக்கடி காரணமாக பதவி காலம் முடியும் முன்னரே 2012-ம் ஆண்டு அவர் பதவிவிலகியதனையடுத்து 2013-ம் ஆண்டு நடந்த தேர்தலில் முற்போக்கு கட்சியை சேர்ந்த அப்துல்லா யாமீன் வெற்றிபெற்று ஜனாதிபதியானார்.
இதனையடுத்து பயங்கரவாத தொடர்பு முறைப்பாடு காரணமாக முன்னாள் அதிபர் முகமது நஷீத் 2016-ம் ஆண்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டார். இதனையடுத்து கடந்த ஆண்டு நடைபெற்ற தேர்தலில் எம்.டி.பி. கட்சியின் துணைத் தலைவர் முகமது சோலி வெற்றி பெற்ற நிலையில் முகமது நஷீத் நாடு திரும்பினார்.
இந்த நிலையில், 87 இடங்களை கொண்ட மாலத்தீவு பாராளுமன்றத்துக்கு நேற்று முன்தினம் தேர்தல் நடைபெற்ற நிலையில் எம்.டி.பி. கட்சி 3-ல் 2 பங்கு இடங்களை கைப்பற்றி வெற்றிப்பெற்றுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முதற்கட்ட தேர்தல் முடிவுகளின்படி மொத்தம் உள்ள 87 இடங்களில் 50 இடங்களில் எம்.டி.பி. கட்சி வேட்பாளர்கள் வெற்றி பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது