Home இலங்கை எல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல…..

எல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல…..

by admin

23.04.2019 ஆம் திகதி ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்கள் நாட்டு மக்களுக்கு ஆற்றிய விசேட உரை

மதிப்பிற்குரிய பௌத்த குருமார்களே,
கிறிஸ்தவ மதகுருமார்கள் உள்ளிட்ட ஏனைய மதகுருமார்களே,
அன்பிற்குரிய பெற்றோர்களே, பிள்ளைகளே, அன்பர்களே,

கடந்த 48 மணித்தியாலங்களில் எமக்கு முகங்கொடுக்க நேர்ந்த அனுபவங்கள் மிகுந்த வேதனைமிக்க, மிகவும் துக்ககரமான சம்பவங்கள் நிறைந்த துரதிஸ்டவசமான சந்தர்ப்பமாகும் என்பதை என்னைப் போலவே நீங்களும் ஏற்றுக்கொள்வீர்கள். உங்கள் முன் உரை நிகழ்த்தும் இன்றைய தினம் ஒரு தேசிய துக்க தினமாகும். துக்கத்தை வெளிப்படுத்தும் முகமாகவே அரசு இதனை பிரகடனப்படுத்தியது. நாம் ஒருபோதும் எதிர்பார்க்காத இந்த பயங்கரவாத, காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை இலங்கை அரசு என்ற வகையிலும் இந்த நாட்டு மக்கள் என்ற வகையிலும் மிக வன்மையாக கண்டிக்கின்றோம் என்பதை இச்சந்தர்ப்பத்தில் கூறவேண்டும். இந்த சம்பவத்தைப் பற்றி இத்தருணத்தில் இந்த நாட்டுக்குள் பல்வேறு கருத்துக்கள், திறனாய்வுகள், கலந்துரையாடல்கள், விவாதங்கள் விமர்சனங்கள் ஆகியன ஏற்பட்டிருக்கின்றன. இது ஒரு சுதந்திரமான ஜனநாயக சமூகத்தின் இயல்பான தன்மை என்றே கருதுகிறேன். உலகிலேயே மிகவும் பயங்கரமான காட்டுமிராண்டித்தனமான எல்ரீரீஈ பயங்கரவாதிகளின் 27 வருடங்களுக்கும் மேலான மிக கொடூரமான அனுபவங்களை நாம் பெற்றிருக்கின்றோம். அக்காலகட்டத்தில் இந்த நாட்டில் ஏற்பட்டிருந்த நிலைமை, அதன் துன்ப துயரங்கள், பொருளாதார ரீதியில் நாட்டில் ஏற்பட்ட பின்னடைவுகள் ஆகியவற்றைப் பற்றி நான் எடுத்துரைக்கத் தேவையில்லை.

அந்த நீண்ட கால அனுபவங்கள் 2009 ஆம் ஆண்டு முடிவிற்கு வந்து இப்போதைக்கு 10 வருடங்கள் ஆகிவிட்டன. அவ்வாறு கடந்த 10 ஆண்டுகளாக இந்த நாட்டில் மிக உயரிய சமாதானம் நிலவியது. குறிப்பாக 2015 ஆம் ஆண்டு ஜனவரி 08 ஆம் திகதி முதல் இது வரையிலான நான்கரை வருடங்கள் ஜனநாயகம், ஊடக சதந்திரம், மக்களின் உரிமைகள் ஆகியவற்றை மிகச் சிறந்த முறையில் அனுபவித்துவந்த காலம் என்பதை நீங்கள் அனைவரும் அறிவீர்கள். அத்தகைய பின்னணியில் கடந்த ஞாயிறன்று ஏற்பட்ட இத் தேசிய துன்பியல் சம்பவத்தை நாம் ஒருபோதும் எதிர்பார்க்கவில்லை. ஆகையால் அதன் உண்மைத்தன்மையை நாட்டு மக்கள் முன் எடுத்துரைப்பதும் ஒழிவு மறைவின்றி அனைத்து விடயங்களையம் இந்த நாட்டு மக்களாகிய உங்கள் முன் வைக்க வேண்டியதும் எனது கடமையும் பொறுப்புமாகும். இந்த பயங்கரவாத அமைப்பை பற்றி 2017 ஆம் ஆண்டு முதல் எமது பாதுகாப்பு துறைகளுக்கு அறியக் கிடைத்திருந்தது. அதற்கமைய அவ்வமைப்பினர் வெளிநாட்டு பயங்கரவாத குழுக்களுடன் இணைந்து பயிற்சிகளையும் ஆலோசனைகளையும் பெற்று வருவதாகவும் அறியக் கிடைத்தது. இதனால் எமது பாதுகாப்பு தரப்பினர் இவ்வமைப்பின் நடவடிக்கைகளைப் பற்றி மோப்பம் பிடித்து தகவல்களைத் திரட்டி வந்தார்கள். இருப்பினும் இவ்வமைப்பை சார்ந்தவர்களை கைதுசெய்து சட்டத்தின் முன் நிறுத்தி அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு தகுந்த சாட்சியங்களும் நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கான தகவல்களும் எமது பாதுகாப்பு துறைக்கு கிடைத்திருக்கவில்லை. கடந்த மூன்று வருடங்களாக தேசிய பாதுகாப்பு சபை கூடிய நேரங்களில் எல்லாம் இந்த அமைப்பின் அங்கத்தவர்களின் பெயர் விபரங்கள், அவர்கள் மேற்கொண்ட உள்நாட்டு வெளிநாட்டு பயணங்கள் ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்து நாம் அறிந்து வைத்திருந்தோம் என்பதைக் கூறவேண்டும். இருப்பினும் நாம் ஒருபோதும் எதிர்பாராத நேரத்தில் இவ்வமைப்பு சர்வதேச பயங்கரவாத குழுவொன்றின் ஆலோசனை, வழிகாட்டுதல் மற்றும் தலைமைத்துவத்தின் கீழ் எமது நாட்டில் ஏற்படுத்திய இந்த மாபெரும் உயிர்ச்சேதத்தினால் வறிய அப்பாவி குடும்பங்களின் பிஞ்சுக் குழந்தைகள் முதல் செல்வந்த குடும்பங்களின் அங்கத்தவர்கள் வரையிலும் இந்த நாட்டுக்கு வருகைத்தந்திருந்த உல்லாச பிரயாணிகளும் வர்த்தகர்களும் இந்த சம்பவத்தில் கொல்லப்பட்டார்கள். இவ்வனைவருக்காகவும் மீண்டும் இந்நாட்டு மக்கள் சார்பில் எனது ஆழ்ந்த அனுதாபங்களையும் வேதனையையும் தெரிவித்துக் கொள்கின்றேன்.

சோதனையும் வேதனையும் நிறைந்த இச்சந்தர்ப்பத்தில் நமது நாட்டின் குடிமக்களாகிய எமது அன்பிற்குரிய கிறிஸ்தவ மதத்தினர் வெளிப்படுத்திய ஒழுக்கத்தையும் அடக்கத்தையும் பற்றி நான் இங்கு நிச்சயம் குறிப்பிட வேண்டும். மதிப்பிற்குரிய பேராயர் மெல்கம் ரஞ்சித் ஆண்டகை உள்ளிட்ட கிறிஸ்தவ மதகுருமார்களும் மக்களும் இந்த நாட்டினுள் மோதல்கள் ஏற்படாதவகையில் அமைதியான முறையில் மக்களை வழிநடத்தியதையிட்டும் மக்களை வழிநடத்தும் வகையில் மிகுந்த அர்ப்பணிப்புடனும் மிகுந்த பொறுமையுடனும் செயற்பட்டதற்காகவும் இத்தருணத்தில் இந்த கிறிஸ்தவ மக்கள் சமூகத்தை நான் பெரிதும் மதிக்கின்றேன்.

இப்போது இந்த சம்பவத்தின் பின்னர் நாட்டு மக்கள் என்ற வகையில் எம்முன் இருப்பது இந்த துயரத்திலும் அழிவிலுமிருந்து எவ்வாறு மீள் எழுவது என்ற செயற்பாடே ஆகும். அச்செயற்பாட்டின் போது எமது பாதுகாப்புத் துறை பொலிஸ் உள்ளிட்ட முப்படைகளின் கட்டமைப்பில் முழுமையான ஒரு மறுசீரமைப்பினை ஒரு வார காலத்திற்குள் ஏற்படுத்தவும் நான் எதிர்பார்க்கின்றேன். எதிர்வரும் 24 மணித்தியாலங்களுக்குள் பாதுகாப்பு துறை தலைமைகளில் மாற்றங்களையும் ஏற்படுத்தவுள்ளேன். இந்த சம்பவம் நிகழ்ந்த கணம் முதல் பாதிக்கப்பட்ட அப்பாவி மக்களினதும் உயிரிழந்தவர்களினதும் துன்பங்ளையும் துயரங்களையும் புரிந்து கொண்டு சமயோசிதமான முறையில் பொலிஸாரும் பாதுகாப்புத் துறையினரும் செயற்பட்டதையிட்டு எனது பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கின்றேன்.

இங்கு நான் உங்களுக்கு ஒரு முக்கிய விடயத்தைக் குறிப்பிட வேண்டும். காட்டுமிராண்டித்தனமான எல்ரீரீஈ அமைப்பு ஆரம்பமான 80களில் இந்த நாட்டின் சிங்கள மற்றும் முஸ்லிம் இனத்தவர்கள் இந்த நாட்டின் அனைத்து தமிழர்களையும் பயங்கரவாதிகளாகவே நோக்கினர். ஆயினும் காலப்போக்கில் எல்லா தமிழர்களும் பயங்கரவாதிகள் அல்ல என்பதை அந்த மக்கள் புரிந்து கொண்டார்கள். ஆகையினாலேயே எம்மால் இன ஒற்றுமையையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்ப முடிந்தது. ஆகையால் இந்த நாட்டில் வாழ்கின்ற சிங்கள மக்களிடமும் தமிழ் மக்களிடமும் இந்த நாட்டில் வாழ்கின்ற முஸ்லிம் இனத்தவர்களை சந்தேகக் கண் கொண்டு பார்ப்பது உகந்ததல்ல என்பதை மிகுந்த கௌரவத்துடன் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன்.

எல்லா முஸ்லிம் இனத்தவரும் பயங்கரவாதிகள் அல்ல என்பதை குறிப்பாக ஞாபகத்தில் வைத்துக்கொள்ள வேண்டும். இவ்வாறான மிலேச்சத்தனமான பயங்கரவாத அமைப்புக்களுடன் சம்பந்தப்பட்டிருப்பது மிகச் சிலரே. ஆகையினால் நாட்டினுள் சிங்கள, முஸ்லிம், தமிழ் இனங்களுக்கிடையில் ஒற்றுமையையும் நல்லிணக்கைத்தையும் பேணிப் பாதுகாப்பது கட்டாயத் தேவையாக அமைவதுடன் அனைவர் மீதும் நம்பிக்கையுடன் வாழ வேண்டியது அவசியமாகின்றது.

நாட்டில் அமைதியை ஏற்படுத்தவே பயங்கரவாதிகளை ஒடுக்கும் நோக்கில் அவசரகால சட்டதிட்டங்களை வர்த்தமானியில் வெளியிட நேர்ந்தது. பயங்கரவாத தடுப்பு சட்டத்தை மாத்திரம் வர்த்தமானியில் அறிவிப்பதன் மூலம் பொலிஸாருக்கும் முப்படையினருக்கும் தேவையான அதிகாரங்கள் வழங்கப்பட்டிருக்கின்றன என்பதை இங்கு நான் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன். இந்த அவசர கால சட்டங்களை அறிவிக்காது இருப்பின் குறிப்பாக பொலிசாருக்கு இப்போது இருக்கின்ற அதிகாரங்கள் போதுமானதாக அமையாததுடன் பாதுகாப்பு செயற்பாடுகளில் தரைப்படை, வான்படை, கடற்படை ஆகிய முப்படைகளை உள்வாங்க இயலாது போய்விடும். அந்த நிலைமையை சமாளித்து முப்படையினருக்கு தேவையான அதிகாரங்களை சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு தேவையான அதிகாரங்களை பெற்றுக் கொடுப்பதற்காகவே குறிப்பாக அவசரகால சட்டதிட்டங்களுடன் பயங்கரவாத தடை சட்டத்தை மாத்திரம் வர்த்தமானியில் அறிவிக்கப்பட்டிருக்கின்றது. ஆகையால் எவ்விதத்திலும் நாட்டின் ஜனநாயகத்தையும் சுதந்திரத்தையும் மட்டுப்படுத்துவதற்காகவோ எவருக்கும் பாதகங்களை ஏற்படுத்தும் வகையிலோ சுதந்திரமான இயல்பு வாழ்க்கைக்கு சவாலாக அமையும் விதத்திலோ இந்த சட்ட திட்டங்களை உபயோகப்படுத்த விடமாட்டேன் என்ற பொறுப்பை தனிப்பட்ட வகையில் நான் ஏற்றுக்கொள்கின்றேன். நாட்டின் பேச்சு சுதந்திரம், ஊர்வலங்கள் செல்வதற்கான எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களை மேற்கொள்ளல், ஊடக சுதந்திரம் ஆகிய விடயங்கள் தொடர்பில் இச்சட்ட திட்டங்கள் எவ்விதத்திலும் எவருக்கும் இடையூறாகவோ சவாலாகவோ அமையாது என்பதை நான் குறிப்பிட விரும்புகின்றேன்.

அத்தோடு இத்தருணத்தில் இச்சம்பவம் நிகழ்ந்த நேரம் முதல் இயல்பு நிலைமையை ஏற்படுத்துவதற்கு செயற்பட்டுவரும் முப்படைகள், பொலிஸ், விசேட அதிரடிப்படை ஆகியவற்றின் செயற்திறன், குற்ற விசாரணை மற்றும் புலனாய்வு பிரிவுகளின் மிகுந்த அர்ப்பணிப்பு ஆகியவற்றை மீண்டும் மீண்டும் பாராட்டுவதுடன் இப்புலனாய்வு பணிகளின் போது உயிர்த்தியாகம் செய்ய நேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர்கள் மூவரையும் இங்கு நான் மதிப்புடன் ஞாபகப்படுத்த விரும்புகின்றேன்.
ஏற்கனவே இச்சம்பவத்துடன் தொடர்புபட்ட குற்றவாளிகள் சந்தேக நபர்கள் உள்ளிட்ட பொறுப்புக்கூற வேண்டியவர்கள் பெரும் எண்ணிக்கையில் கைது செய்யப்பட்டு பெருமளவு தகவல்கள் திரட்டப்பட்டிருக்கின்றன. ஆகையால் மீண்டும் இவ்வாறான மனம் வருந்தத்தக்க துன்பியல் சம்பவங்கள் ஏற்படுவதை தவிர்த்துக் கொள்வதற்கான மிகத் தெளிவான ஆற்றல் எமக்கு இருக்கின்றது என்பதையும் இங்கு நான் கூற வேண்டும்.

அத்தோடு இந்த சம்பவத்தின் பின்னர் பலம்மிக்க சுமார் ஏழு எட்டு எமது நட்பு நாடுகள் அவர்களின் பூரண ஒத்துழைப்பை எமக்கு வழங்க முன்வந்திருக்கின்றனர். அவர்களின் ஒத்துழைப்பினை பெற்று எதிர்காலத்தில் செயற்படவிருக்கின்றோம். இந்த சம்பவம் பற்றி ஊடகங்களிலும் சமூகத்திலும் முன்வைக்கப்படுகின்ற ஒரு முக்கியமான கருத்தாக எமது நட்பு நாடொன்றினால் கொடுக்கப்பட்ட புலனாய்வு தகவல்களை அடிப்படையாகக் கொண்டு எமது பாதுகாப்பு துறையினர் எதனால் செயற்படவில்லை என்பது இங்கே கலந்துரையாடப்படும் மக்களுக்கு கேள்விக்குறியாகவுள்ள விடயமாக இருக்கின்றது.

ஆயினும் அவ்வாறு அரச புலனாய்வு பிரிவிற்கு கிடைக்கபெற்ற அத்தகவல்கள் பற்றி புலனாய்வுத்துறை உயர் அதிகாரிகளினால் எனக்கும் அறியத்தரப்படவில்லை என்பதைக் குறிப்பிட வேண்டும். கிடைக்கப்பெற்ற அத்தகவல்களை எனக்கு அறிவித்திருப்பார்களாயின் உடனடியாக தக்க நடவடிக்கைகளை நான் எடுத்திருப்பேன் ஆகையால் அப்பொறுப்புக்களை ஏற்று செயற்பட வேண்டியவர்கள் அப்படி செய்யத் தவறியிருப்பதால் அவர்களுக்கு எதிராக தக்க நடவடிக்கைகளை உடனடியாக எடுக்க நான் தீர்மானித்திருக்கின்றேன்.

நேற்று மாலை கூடிய பிரதமர் உள்ளிட்ட அமைச்சரவை கூட்டத்திலும் இவ்விடயம் தொடர்பாக ஆழமாக கலந்துரையாடப்பட்டது. ஆகையினாலேயே நான் அரச பாதுகாப்பு துறையிலும் புலனாய்வு துறையிலும் முழுமையான மறுசீரமைப்பினை மேற்கொண்டு இவ்வாறான பயங்கரவாத செயல்கள் மீண்டும் ஏற்படாத வகையில் மிகக் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்க தீர்மானித்துள்ளேன் என்பதை இங்கு கூறிக்கொள்ள விரும்புகின்றேன். குறிப்பாக மலரும் நாளைய பொழுதில் இந்த நாட்டு மக்களுக்கு அச்சமும் பயமும் இன்றி வாழ்வதற்கு தேவையான சுற்றுச்சூழலை ஏற்படுத்துவதற்கான சகல திட்டங்களையும் நான் வகுத்திருக்கின்றேன்.

குறிப்பாக அன்றாட வாழ்க்கையில் அரச ஊழியர், பாடசாலை மாணவரகள் வர்த்தகர்கள் நாட்டின் பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் சுதந்திரமாகவும் அமைதியாகவும் வாழத்தக்க சூழலை நிச்சயம் நாம் ஏற்படுத்துவோம் என்பதை அரசாங்கம் என்ற வகையில் கூறிக்கொள்ள விரும்புகின்றேன் அத்தோடு ஒரு முக்கியமான விடயத்தை இங்கு கூற வேண்டும். ஆரம்பத்தில் நான் குறிப்பிட்டதைப் போன்று சுமார் மூன்று தசாப்த கால பயங்கரவாத யுத்த அனுபவங்களையும் அதன் வெற்றியையும் பற்றி பேசுகின்ற நாம் இந்த சம்பவங்களுக்கும் அந்த பயங்கரவாத அமைப்பிற்கும் இடையே காணப்படுகின்ற வித்தியாசங்களை மிகத் தெளிவாகப் புரிந்துகொள்ள வேண்டியது கட்டாயத் தேவையாக இருக்கின்றது. ஏனெனில் இவ்வாறான பிரச்சினைகளின் போது நாம் உணர்வுபூர்வமாக கதைப்பதை விட புத்திசாதுர்யமாக கதைப்பதே சாலச் சிறந்தது என நான் நம்புகின்றேன்.

பிரபாகரனின் எல்ரீரீஈ பயங்கரவாத அமைப்பு உள்நாட்டு ரீதியிலேயே பலமிக்க பயங்கரவாத அமைப்பாக உருவெடுத்திருந்தது. ஆயினும் அந்த அமைப்பிற்கு அன்று நாம் முகங்கொடுத்த விதத்தை விட வித்தியாசமான விதத்திலேயே இன்று எமக்கு முகங்கொடுக்க நேர்ந்திருக்கின்றது. அதாவது சர்வதேச ரீதியில் பலமிக்கதோர் அமைப்பு இச்சம்பவங்களுடன் தொடர்புபட்டிருப்பதாக அறியவந்திருக்கின்றது. ஆகையால் உள்நாட்டு ரீதியில் உருவாகிய பயங்கரவாத அமைப்பின் தன்மைக்கும் எமக்கு புதிய அனுபவமாக இருக்கின்ற இந்த துன்பகரமான பலமிக்க சர்வதேச பங்கரவாத அமைப்பின் செயற்பாடுகளுக்கும் இடையில் வேறுபாடு இருக்கின்றது. ஆகையால் இவ்விடயம் தொடர்பில் நாம் மிகுந்த பொறுமையுடனும் புத்திசாதுரியத்துடனும் செயற்பட வேண்டும் என நான் நினைப்பதைப் போன்றே நீங்களும் நினைப்பீர்கள் என நான் நம்புகின்றேன்.

ஆகையால் புதிய தொழிநுட்பம், உயரிய தொழிநுட்பம் ஆகியவற்றை உபயோகப்படுத்தி பாதுகாப்பு தரப்புக்களின் உத்திகளையும் உபயோகப்படுத்தி பயங்கரவாதத்திற்கு எதிரான மிக உயரிய தொழிநுட்பத்தை பயன்படுத்தும் நாடுகளின் ஆலோசனைகளையும் வளங்களையும் வழிகாட்டல்களையும் பெற்று இந்த சர்வதேச பயங்கரவாத அமைப்பினை நமது தாய் நாட்டிலிருந்து வேறோடு பிடுங்கியெறிவதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் நிச்சயம் மேற்கொள்வேன் என்பதை உங்களுக்கு நான் உறுதியாக தெரிவித்துக் கொள்கின்றேன். ஆகையால் இவ்வாறான விடயத்தில் எமது ஒற்றுமையே பலமாக அமைகின்றது.

அரசியல் கட்சி பேதங்களின்றி மத பேதங்களின்றி இன பேதமின்றி செயற்பட வேண்டியது கட்டாயத் தேவையாகும். இனவாதம் என்பது என்ன? பயங்கரவாதம் என்பது என்ன? என்பதை நாம் மிகத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். இனவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் இடையிலான வித்தியாசத்தை அறிவும் ஆற்றலுமிக்க நீங்கள் அனைவரும் புரிந்து கொண்டிருப்பீர்கள் என நான் நம்புகின்றேன். ஆகையால் இந்த பாரதூரமான பயங்கரவாத அமைப்பு இலங்கையை இவ்வாறு தேர்ந்தெடுத்திருப்பதைப் பற்றி நாம் மிகுந்த விழிப்புணர்வுடன் செயற்பட வேண்டும்.

இந்த நாட்டில் இருந்துவந்த சமாதானமான சூழ்நிலையை சிதைத்து நாட்டு மக்கள் மத்தியில் பய பீதியை ஏற்படுத்தி குறிப்பாக ஒரு சர்வதேச பயங்கரவாத அமைப்பு நம் நாட்டின் ஒரு குழுவினருடன் இணைந்து மேற்கொண்டிருக்கும் இந்த மிருகத்தனமான தாக்குதலில் நாம் பெற்ற அனுபவத்தை மீண்டும் பெறாதிருப்பதற்கான பொறுப்பு நம் அனைவருக்கும் இருக்கின்றது. ஒருவருக்கொருவர் குற்றஞ்சாட்டிக் கொள்வது இத்தருணத்தில் தகுந்ததல்ல என்பதே எனது நம்பிக்கையாகும். ஆகையால் அவ்வாறு செயற்பட வேண்டாம் என மிகுந்த கௌரவத்துடனும் கண்ணியத்துடனும் கேட்டுக்கொள்ள விரும்புகின்றேன். அத்தோடு பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவம் செய்கின்ற மற்றும் செய்யாத அனைத்து கட்சி தலைவர்களையும் அழைத்து வட்ட மேசை கலந்துரையாடலை நடத்துவதற்கும் அரசின் எதிர்கால திட்டங்களை அவர்களுக்கு எடுத்துக் கூறவும் எதிர்பார்க்கின்றேன்.

அதேபோன்று பௌத்த, கிறிஸ்தவ, இந்து, இஸ்லாம் ஆகிய அனைத்து மதத் தலைவர்களையும் இந்த நாட்டின் பல்வேறு துறை சார்ந்த கல்விமான்களையும் அறிஞர்களையும் அழைத்து ஒரே மேசையில் அவர்களுடன் இவ்விடயம் பற்றிக் கலந்துரையாடி அவர்களது கருத்துக்களையும் உள்வாங்கி இந்த அரசின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலம் இந்த நாட்டின் எதிர்காலத்தை சுதந்திரமான ஒரு சமூகமாக வாழ்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்வேன் என்க கூறிக்கொள்ள விரும்புகின்றேன். ஆகையால் வதந்திகளைப் பரப்பாது உண்மை மீது மாத்திரம் நம்பிக்கை வைத்து வதந்திகளை நம்பி ஏமாறாது செயற்படுவது இத்தகைய தருணத்தில் மிகவும் தேவைப்படுகின்றது. ஆகையால் அரசியல் லாபம் கருதி செயற்படாது ஒட்டுமொத்த தேசத்தின் எதிர்காலத்திற்காகவும் இன்று இந்த நாட்டில் வாழும் மக்களைப் போன்றே எதிர்கால சந்ததியினரின் நன்மைக்காகவும் இந்த மிலேச்சத்தனமான பயங்கரவாதத்தை அடியோடு ஒழித்துக்கட்ட வேண்டும் என்ற எமது இந்த முடிவிற்கு உங்கள் அனைவரினதும் பூரண ஒத்துழைப்பை பெற்றுத்தருமாறு மிகுந்த கௌரவத்துடன் உங்களை நான் கேட்டுக்கொள்கின்றேன்.
உங்கள் அனைவருக்கும் நன்றி
மும்மணிகளின் ஆசி
கடவுள் துணை

ஜனாதிபதி ஊடகப் பிரிவு
2019-04-23

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More