குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மன்னார் மாவட்ட ஜமியத்துல் உலமா சபையினருக்கும், மன்னார் மறைமாவட்ட ஆயர் இம்மானுவேல் பெனாண்டோ ஆண்டகைக்கும் இடையில் விசேட சந்திப்பொன்று நேற்று செவ்வாய்க்கிழமை மாலை 6.30 மணியளவில் மன்னார் ஆயர் இல்லத்தில் இடம் பெற்றுள்ளது. மன்னார் மாவட்டத்தில் கத்தோலிக்க மற்றும் முஸ்லீம் மக்களின் நல்லுறவு தொடர்ந்தும் பேனப்பட வேண்டும் என்ற நோக்குடன் குறித்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது.
மன்னார் மாவட்ட மாவட்ட ஜமியத் உலமா அமைப்பினருடன், சிரேஸ்ட சட்டத்தரணி எம்.சபுர்தீன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹீனைஸ் பாறுக் , மன்னார் மூர்வீதி மற்றும் உப்புக்குளம் பெரிய பள்ளிவாயில்களின் மௌலவிகள் மற்றும் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர்களும் இணைந்து மன்னார் மறைமாவட்ட ஆயருடன் குறித்த சந்திப்பில் ஈடுபட்டிருந்தனர்.
குறித்த சந்திப்பின் போது கடந்த ஞாயிற்றுக்கிழமை ஈஸ்டர் தினத்தன்று நாட்டில் இடம் பெற்ற துக்ககரமான சம்பவத்திற்கு அனுதாபத்தையும் கண்டணத்தையும் மன்னார் ஜமித்துல் உலமா அமைப்பினர் மன்னார் மறைமாவட்ட ஆயரிடத்தில் தெரிவித்துக் கொண்டனர்.
மன்னார் மாவட்டத்தில் முஸ்ஸீம்கள் மற்றும் கத்தோலிக்க மக்களுக்கு இடையிலான உறவு இத்தகைய துன்பகரமான செயலினால் சீர் கெட்டு விடக்கூடாதென்பதுடன், நல்லுறவை ஏற்படுத்தும் முகமாக பள்ளிவாயில்கள் , ஆலயங்களில் சமய சொற்பொழிவுகள் இடம் பெற வேண்டுமென ஆயரிடம் வேண்டுகோள் விடுத்ததுள்ளனர்.
மேலும் கடந்த காலங்களைப் போன்று இரு சமயத்தவர்களின் உறவு முறை எவ்வாறு இருந்ததோ அவ்வாறே தொடர்ந்தும் பேணப்பட வேண்டுமென கேட்டுக் கொள்ளப்பட்டது.