தன்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் கடந்த 2016-ம் ஆண்டு நடந்த ஜனாதிபதி தேர்தலின் போது, குடியரசு கட்சி வேட்பாளராக களம் இறங்கிய டிரம்ப்பை வெற்றி பெறவைப்பதற்காக ரஸ்யா உதவியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது
இது தொடர்பில் அமெரிக்காவின் மத்திய புலனாய்வு குழுவின் முன்னாள் இயக்குனர் ரொபர்ட் முல்லர் தலைமையில் சிறப்பு விசாரணைக்குழு சுமார் 2 ஆண்டு காலம் தீவிர விசாரணைக்கு பிறகு முல்லர் தலைமையிலான விசாரணைக்குழு தன்னுடைய அறிக்கையை, அமெரிக்க அரசு நீதித்துறையிடமும், சட்டமா அதிபரிடமும் தாக்கல் செய்தது.
எனினும் ஜனநாயக கட்சியினர் விசாரணை குழுவின் முழுமையான அறிக்கையை பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யுமாறு கோரிக்கை விடுத்ததனையடுத்து 448 பக்கங்கள் கொண்ட அந்த அறிக்கை கடந்த வாரம் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது.
அந்த அறிக்கையில், 2016-ம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலின் போது, தற்போதைய ஜனாதிபதி டிரம்போ அவரது பிரசார குழுவை சேர்ந்தவர்களோ ரஸ்யாவுடன் சேர்ந்து சதி செய்தார்கள் என்பதற்கு எந்தவித ஆதாரமும் இல்லை என தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், விசாரணை குழுவில் இருந்து முல்லரை நீக்க வெள்ளை மாளிகை சட்டத்தரணிக்கு டிரம்ப் உத்தரவிட்டதாகவும், ஆனால் அதில் உடன்பாடு இல்லாததால் வெள்ளை மாளிகை வக்கீல் பதவி விலகியதாகவும் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து, விசாரணைக்குழுவின் அறிக்கையின் மூலம் டிரம்ப் விசாரணையை தடுத்து நிறுத்த பல்வேறு வகையில் இடையூறு அளித்தது தெரியவந்திருப்பதாக தெரிவித்து அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என ஜனநாயக கட்சியினர் அழுத்தம் கொடுத்தனர்.
இந்த நிலையில் தன்னை பதவி நீக்கம் செய்யக்கோரும் ஜனநாயக கட்சியினரின் கோரிக்கைக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள டிரம்ப் மிகப்பெரிய குற்றங்கள் மற்றும் தவறான நடவடிக்கைகளுக்காக மட்டுமே ஜனாதிபதியை பதவி நீக்கம் செய்ய கோர முடியும். நான் எந்த குற்றமும் செய்யவில்லை. எனவே என்னை பதவி நீக்கம் செய்ய முடியாது என தனது ருவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.