தமிழகத்தில் தீவிரவாதத் தாக்குதலுக்கு வாய்ப்பு இருப்பதாக பெங்களூரு காவல் துறை எச்சரிக்கை விடுத்திருக்கிறது. கடந்த 21ஆம் திகதி இலங்கையில் பல்வேறு இடங்களில் குண்டுவெடிப்பு தாக்குதல் நடத்தப்பட்டதனைத் தொடர்ந்து இந்தியாவிலும் கடலோரப் பகுதிகளில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில் நேற்றையதினம் சென்னையில் வட மாநிலத்தை சேர்ந்த தீவிரவாதியான கந்தர்ப்பதாஸ் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் கட்டப்பட்டு வந்த தனியார் மருத்துவமனையில் பாதுகாவலராகக் கடந்த ஆறு மாதமாக பணியாற்றி வந்ததாகவும், இந்த மருத்துவமனையை அடுத்த வாரம் குடியரசுத் துணைத் தலைவர் திறந்து வைக்க உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் தமிழகத்தில் தீவிரவாதத் தாக்குதல் நடைபெற வாய்ப்பு இருப்பதாக பெங்களூரு காவல் துறை தமிழகக் காவல் துறைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
ஆந்திரா, தமிழ்நாடு, புதுச்சேரி, தெலங்கானா உள்ளிட்ட மாநிலங்களில், முக்கியமான பகுதிகளில் குண்டு வெடிக்கும் எனவும், ராமநாதபுரத்தில் 19 தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாகவும், குறிப்பாக புகையிரதங்;களில் குண்டு வெடிக்கும் வாய்ப்பு அதிகம் இருப்பதாகவும் ஒருவர் தொலைபேசி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
இதனையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கக் கோரித் தமிழகக் காவல் துறைக்குப் பெங்களூரு காவல் துறை எச்சரிக்கை விடுத்துள்ள நிலையில் தமிழகத்தின் முக்கிய இடங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
#tamilnadu #bengalur #warning #attack