சாய்ந்தமருது தாக்குதலுக்கு உரிமை கோரியுள்ள ஐ.எஸ் அமைப்பு இதன்போது 17 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை பாதுகாப்புத் தரப்புக்குகிடைத்த புலனாய்வுத் தகவலின் அடிப்படையில் கல்முனை- சாய்ந்தமருது ஆகிய பகுதிகளில் தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட போது இலங்கையின் பல பகுதிகளில் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொண்ட குழுவினருக்கும் அங்கிருந்த குழுவொன்றுக்கும் தொடர்பு இருப்பது கண்டுடிபிக்கப்பட்டது.
அத்துடன் சம்மாந்துறைப் பகுதியிலுள்ள வீடொன்றில் இருந்து தற்கொலை குண்டுதயாரிக்கப் பயன்படும் பல பொருட்கள் மீட்கப்பட்டதுடன், ஐ.எஸ்.அமைப்பினரின் பதாதைகள் , கொடிகள் உட்பட பல தற்கொலை தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புபட்ட பொருட்கள் மீட்கப்பட்டிருந்தன.
இதையடுத்து கல்முனை, சாய்ந்தமருது, சவளக்கடை ஆகிய பகுதிகளுக்கு மறு அறுவித்தல் வரை பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அத்துடன் சம்மாந்துறை, சாய்ந்தமருது, நிந்தவூர் மற்றும் அட்டாளைச்சேனை ஆகிய பகுதிகளில் தற்கொலை குண்டுத் தாக்குதல்களை மேற்கொண்ட பயங்கரவாதிகள் தங்கியிருந்ததாக சந்தேகிக்கப்படும் 4 வீடுகள் முற்றுகையிடப்பட்டு அவர்கள் பயன்படுத்தியதாக சந்தேகிக்கப்படும் 119 பொருட்கள் மீட்கப்பட்டன.
மேலும் சாய்ந்தமருதுப் பகுதியிலுள்ள வீடொன்றில் ஆண்கள், பெண்கள் மற்றும் சிறுவர்கள் உட்பட 15 க்கும் மேற்பட்ட பயங்கரவாத செயற்பாடுகளுடன் தொடர்புடைய குழுவொன்றை பாதுகாப்புத் தரப்பினர் சுற்றிவளைத்திருந்தனர்
சந்தேகத்திற்கிடமான அந்த வீட்டிலிருந்து பாதுகாப்புத்தரப்பினர் மீது தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் மேற்கொண்ட பதில் தாக்குதலையடுத்து குறித்த வீட்டிலிருந்தவர்கள் குண்டுகளை வெடிக்கவைத்துள்ளதாக சந்தேகிக்கப்படுகின்றது.
இந்தநிலையில் சாய்ந்தமருது வீட்டில் தாக்குதல் நடத்திய பயங்கரவாதியின் புகைப்படத்தை ஐ.எஸ் தீவிரவாத அமைப்பின் செய்திப் பிரிவான அமாக் வெளியிட்டுள்ளது.
கடந்த 21 ஆம் திகதி உயர்ப்பு ஞாயிறுதினத்திதன்று இடம்பெற்ற தொடர் தற்கொலை தாக்குதல் நடத்திய தேசிய தவ்ஹீத் ஜமாஅத் இயக்கத்தின் தலைவர் சஹ்ரான் ஹாசிம், கல்முனை சாய்ந்தமருது வீட்டில் தற்கொலை தாக்குதலை மேற்கொண்ட குண்டுதாரியும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை தற்போது குறித்த செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.
குறித்த வெடிப்பில் பெண்கள், ஆண்கள் மற்றும் சிறுவர்கள் என உயிரிழந்த 15 பேரின் உடல்களை மீட்டதாக காவல்துறை ஊடகப்பேச்சாளர் தெரிவித்திருந்ததுடன் காயமடைந்த பெண்ணொருவர் உட்பட சிறுபிள்ளையொருவரையும் மீட்ட பாதுகாப்புத்தரப்பினர் அவர்களுக்கு முதலுதவி வழங்கி வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
இந்த தாக்குதலில் கொல்லப்பட்ட 15 பேரில் 6 பேர் தற்கொலை குண்டுதாரிகள் அடங்குவதாக காவல்துறை ஊடகப் பிரிவு அறிவித்திருந்தது.
இந்நிலையில், குறித்த தாக்குதல் சம்பவத்திற்கு பொறுப்பேற்றுள்ள ஐ.எஸ் அமைப்பு இந்த சம்பவத்pன் போது 17 காவல்துறையினர் கொல்லப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
#kalmunai #ISIS #eastersundaylk #army #roundup #attack