அடையாள வேலை நிறுத்தம் – 03.05.2019
————————————————–
வவுனியா வளாகம் தவிர்ந்த சகல ஊழியர்களுக்கும்,
சில மாதங்களாக தொடர்ந்துவரும் கைவிரல் பதிவு இயந்திரத்தினூடாக தின வரவு மற்றும் செல்கையினை பதிவு செய்தல் தொடர்பான பல்கலைக்கழக நிர்வாகத்துக்கும் எமக்கும் இடையிலான பிணக்கு தொடர்பில்
(அ)
1. 31.03.2019 மாலை முதல் 01.04.2019 காலை வரை பல்கலைக்கழக பிரதான வாயிலிலும் பிரதம பாதுகாப்பு அதிகாரியின் அலுவலகத்திலும் கடமையிலிருநத இரண்டு பாதுகாப்பு ஊழியர்களை தமது கடமையை சரிவர ஆற்றவில்லை என்ற பிரதான குற்றச்சாட்டின் கீழ் பணிநீக்கம் செய்துள்ளமை.
2. பணி நீக்கம் செய்யும் முன்னர் அவர்களிடம் விளக்கமெதுவும் கோரப்படவில்லையென்பதோடு விசாரணை அதிகாரி ஒருவர் ஏற்கனவே நியமிக்கப்பட்ட நிலையிலும் அவரை கலந்தாலோசியாமல் பணி நீக்கம் செய்தமை.
3. உள்ளக விசாரணை முடிவடைந்து அறிக்கை சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் அறிக்கையின் பிரகாரம் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாமல் உள்ளமை.
4. பணி நீக்கம் செய்யப்பட்ட பாதுகாப்பு ஊழியர் ஒருவரால் மார்ச் 01 ஆம் திகதியும் அதற்கு முன்பும் கைப்பற்றப்பட்ட உரிய அனுமதியின்றி வெளியே கொண்டு செல்லப்பட்ட பொருட்களை விசாரணையின்றி விடுவித்தமை.
(ஆ) கைவிரல் அடையாள பதிவு இயந்திரத்தை உபயோகிப்பது தொடர்பான எமது சம்மதத்தை ஆரம்பம் முதற்கொண்டே நாம் வழங்கி வரும் நிலையில் துணைவேந்தரோ அன்றி பதிவாளரோ எம்முடன் பேச்சுகளை நடாத்த முனையாமல் கல்வி சாரா ஊழியர்கள் மீது சுற்று நிருபங்கள் வாயிலாக அழுத்தங்களை பிரயோகித்து வருதலோடு மார்ச் மாதம் 01 ஆம் திகதி முதல் ஊழியர்களின் மேலதிகக் கொடுப்பனவை நிறுத்தியும் ஏப்பிரல் 05 ஆம் திகதி முதலும், பின் ஏப்பிரல் 30 ஆம் திகதி முதலும் ஊழியர்களின் வரவுப் பதிவேடுகளை கையகப்படுத்தியும் சுமுகமான பல்கலைக்கழக செயற்பாட்டுக்கு குந்தகம் விளைவிக்கின்றமை.
(இ) பிணக்கினை சுமுகமாக முடிவுக்கு கொண்டுவரும் முகமாக 10.04.2019 அனைத்துப் பல்கலைக்கழக ஊழியர்களின் தொழிற்சங்க சம்மேளனமானது தென்னிலங்கையிலிருந்து வருகை தந்து பேச்சுவார்த்தை நடாத்தி இணக்கப்பாடொன்றை ஏற்படுத்திய போதும் அப் பேச்சுவார்த்தையில் உடன் பட்ட விடயங்களை எழுத்து மூலம் வழங்கத் தவறியமையும், செயற்படுத்தத் தவறியமையும்.
(ஈ) தங்கள் பதவி உறுதிப்படுத்தலுக்காக காத்திருக்கும் தொழிநுட்ப உத்தியோகத்தர்கள் மீதும், தங்கள் பணி தொடர்பான மேற்படிப்பினை தொடர முற்பட்ட நூலக தகவல் உதவியாளர்கள் மீதும் வாய் மூலமாகவும் எழுத்து மூலமாகவும் மிரட்டல்களை மேற் கொள்ளல்.
இவை தொடர்பாக பல்கலைக்கழக பேரவையின் கவனத்தை ஈர்க்கும் முகமாக எதிர்வரும் 03.05.2019 வெள்ளிக்கிழமை ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதென 02.05.2019இல் கூடிய எமது செயற்குழு தீர்மானித்துள்ளது.
தயவு செய்து எமது UEU/2017-2018/141 இலக்க 22.03.2019 திகதி கடிதத்தை மீண்டும் கவனத்திற்கொள்ளுமாறு வேண்டுகிறோம். அத்துடன் மேற்படி விடயங்களில் நியாயமான தீர்வு எட்டப்படும்வரை எமது போராட்டம் தொடரும்.
நீர் வழங்கல், பாதுகாப்பு சேவைகள் குந்தகமின்றி நடைபெறவும் பல்கலைக்கழகத்தில் வெடிபொருட்கள் இன்மையை உறுதிப்படுத்தும் பாதுகாப்புப்படையினரின்; பணிகள் குந்தகமின்றி நடைபெறவும் உரிய ஏற்பாடுகளுக்கு எமது பூரண ஒத்தழைப்பு வழங்கப்படும்.
எனவே 03.05.2019 காலை 08.00 மணிக்கு ஊழியர்கள் அனைவரும் பிரதானவளாக முன்றலில் ஒன்றுகூடுமாறு வேண்டப்படுகின்றனர்
குறிப்பு: ஊழியர்கள் அனைவரும், பாதுகாப்புப்படையினரின்; சோதனை நடவடிக்கைகளிற்கு தேவைப்படுமிடத்து உதவுவதற்காக பல்கலைக்கழக பிரதானவளாக முன்றலில் சோதனை நடவடிக்கை நிறைவுறும் வரை தவறாது சமுகமளித்திருக்கவும் வேண்டப்படுகின்றனர்.
பல்கலைக்கழக ஊழியர் சங்கம்
யாழ். பல்கலைக்கழகம்
02-05-2019.