ஹைட்ரோ கார்பன் திட்டத்தை ரத்து செய்யக்கோரி நாகையில், குளத்திற்குள் இறங்கி விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தஞ்சை, திருவாரூர், நாகை உள்ளிட்ட காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் பல்வேறு இடங்களில் எரிவாயு மற்றும் கச்சா எண்ணெய் எடுக்கும் பணிகளில் ஈடுபட்டு வருவதனால் விளை நிலங்களில் குழாய்கள் பதிக்கப்பட்டு உள்ளதனால் இத் திட்டங்களுக்கெதிராக விவசாயிகள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த நிலையில் ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் திட்டத்திற்கு எதிராக விவசாயிகள் நேற்று நாகையை அடுத்த பாலையூரில் உள்ள அய்யனார் கோவில் குளத்திற்குள் இறங்கி அரை நிர்வாண போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
அப்போது கடலூர் முதல் ராமநாதபுரம் வரை ஹைட்ரோ கார்பன் மற்றும் மீத்தேன் எரிவாயு எடுக்க அனுமதி அளித்த மத்திய அரசை கண்டிப்பது. இந்த திட்டங்களை எதிர்த்து போராட்டங்களில் ஈடுபட்டு கைது செய்யப்பட்ட விவசாயிகளை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும்.
வேதாந்தா மற்றும் ஓ.என்.ஜி.சி. நிறுவனங்கள் டெல்டா மாவட்டத்தை விட்டு வெளியேற வேண்டும். டெல்டா மாவட்டங்களை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்க வேண்டும் என பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் கோசங்களை எழுப்பினர்.
இதேபோல நாகை மாவட்டம் வேளாங்கண்ணி அருகே செருதூர் மீனவர்கள் அங்குள்ள வெள்ளையாற்றில் இறங்கி ஹைட்ரோ கார்பன் திட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தியுள்ளனர். இதன்போது மீனவர்களையும், மீன் இனபெருக்கத்தையும் அழிக்கும் ஹைட்ரோ கார்பன் திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசை அனுமதிக்க மாட்டோம். கடல் வளத்தை அழிக்கும் இந்த திட்டத்தை கைவிட வேண்டும். உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோசங்களை எழுப்பினர்.