194
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்…
ஒரு இனத்தை அழிக்க வேண்டுமனால் அதன் பண்பாட்டை, அதன் அறிவுத்தடங்களை, அதன் சரித்திரத்தை அழிக்க வேண்டும் என்பது இன அழிப்பு சார்ந்த கொள்கைகளாக பின்பற்றப்படுகின்றன. அப்படித்தான் ஈழத்தின் யாழ் நூலகம் அழிக்கப்பட்டது. இன்று யாழ் நூலகம் எரிக்கப்பட்ட கறுப்பு நாள். 1981ஆம் ஆண்டு இதேபோல் ஒரு நாளில் (31.05.1981- 01.06. 1981) யாழ் நூலகம் எரியூட்டப்படது. அந்த நாள், யாழ் நூலம் இன நூலெரிப்பு வன்முறையால் அழிக்கப்பட்ட நாள்.
இலங்கைத் தீவில் ஈழத் தமிழ் மக்கள் தங்கள் உரிமையை குறித்து குரல் எழுப்பப்பட்ட காலத்தில் அவர்களின் குரலின் அறிவுத்தடங்களை, இன உரிமைப் போராட்டத்தின் ஊற்றிடங்களான சரித்திர வேர்களை அழித்து ஈழத் தமிழ் குரலை அழிக்கவும் அதன் சரித்திரத்தை அழிக்கவும் அன்றைய இன வன்முறையாளர்கள் திட்டமிட்டு யாழ் நூலகத்தை எரித்தனர். இதனால் ஈழத் தமிழ் மக்கள் மாபெரும் அறிவிழப்பை, பாரம்பரிய சொத்திழப்பை, தொன்மை இழப்பை முகம் கொடுத்தார்கள். ஈடு செய்ய முடியாத பேரிழப்பு அது.
தெற்காசியாவில் மிகப் பெரும் நூலகமாக கருதப்படும் யாழ் நூலகத்தில் கிட்டத்தட்ட 97ஆயிரம் அரிய புத்தகங்கள் காணப்பட்டன. பல நூற்றாண்டுகள் பழமைகொண்ட ஈழ ஓலைச்சுவடிகள், ஈழத்தின் பண்டைய நூல்கள், பல அரிய பண்டைய தமிழ் நூல்கள், ஈழத் தமிழ் பத்திரிகைகளின் மூலப் பிரதிகள் என்று பல்வேறு வகைப்பட்ட அரிய ஆவணங்கள் இதில் அழிக்கப்பட்டது. மாபெரும் அறிவுப் பொக்கிசமாக யாழ் நூலகம் கருதப்பட்டது.
யாழ் நூலக எரிப்பு என்பது இருபதாம் நூற்றாண்டில் நடந்த மிகப் பெரும் இன நூலெரிப்பு வன்முறையாகும். எவ்வாறு 1983இல் திட்டமிட்டு இனக்கலவரம் செய்யப்பட்டு ஈழத் தமிழ் மக்கள் இன அழிப்பு செய்யப்பட்டார்களோ அதைப்போலவே மிகவும் திட்டமிட்டு இன அறிவழிப்பு செய்யப்பட்டது. தனி ஈழத்திற்கான அரசியல் குரல்கள் எழுந்த கால கட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட இந்தச் செயல் தனி ஈழத்திற்கான ஆயுதப் போராட்டத்திற்கும் உரமூட்டியது.
யாழ்நூலக அறிவழிப்பு வன்முறை ஈழத் தமிழர் போராட்டத்தை வலுப்படுத்தியது. ஈழத் தமிழ் மக்கள் நெஞ்சில் ஆறாத காயத்தை தோற்றுவித்தது. ஒரு அறிவற்ற, பிற்போக்குத் தனமான கொடிய இந்தச் செயல் – இந்த நூலெரிப்பு வன்முறை ஈழத் தமிழ் மக்கள் மாத்திரமின்றி உலக மக்களையும் அதிரச்சிக்குள்ளாக்கியது. இனமேலாதிக்கத்தின் அசீங்கமான வெளிப்படாகவும் கொடிய இன வெறி, அறிவுக்கு எதிரான வெறி மனோபாவத்தின் நடவடிக்கையாகவும் இந்த நிகழ்வு மதிப்பிடப்படுகிறது. இனத்தின் சரித்திரத்தை அழிக்க புத்தகங்களுடன் வன்முறை புரிந்த செயல் இது. அறிவுடன், சிந்தனையுடன் வன்முறை புரிந்த செயல் இது.
இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி, ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த, ஜே.ஆர். ஜெயவர்த்தனவின் ஆட்சிக்காலத்தில் இந்தச் சம்பவம் ஆட்சிக்காலத்தில் இடம்பெற்றது. இந்த சம்பவத்தில் அன்றைய அமைச்சர் காமினி திசாநாயக்கா உள்ளிட்ட பலர் நேரடியாக செயற்பட்டமைக்கான ஆதாரங்கள் வெளிப்பட்டன. அன்றைய அரசின் இனவெறிக் குண்டர்கள், இராணுவத்தினர், காவல்துறையினர் கூட்டாக இந்த நூல் எரிப்பு வன்முறையில் ஈடுபட்டார்கள்.
யாழ் நூலக எரிப்பு மிகவும் கண்டிக்கத்தக்க, அறிவுடைய, சிந்தனையுடைய மனித சமூகம் வெட்கப்படக்கூடிய ஒரு செயலாக இருக்கிறது. ஆனால் கடந்த நாற்பது வருடங்களாக ஈழத்தில், அதன் பூர்வீககக் குடிகளான ஈழத் தமிழர்களின் சரித்திர தடங்கள் மிக திட்டமிட்டு – தெளிவான கொள்கையில் அழிக்கப்பட்டு வருகின்றன. அன்றைக்கு புத்தகங்களுடன் ஒரு நூலகம் எரியூட்டப்பட்டது. அதன் பின்னரான காலத்தில் போர் நடவடிக்கைகளின் மூலம் பல்வேறு நூலகங்கள் அழிக்கப்பட்டுள்ளன. இலங்கையை ஆண்ட அத்தனை அரசுகளும் அழித்துள்ளன.
போரின்போது பாடசாலை நூலகங்களின் புத்தங்கள், தனிப்பட்ட வாசகர், எழுத்தாளர்களின் புத்தகங்கள், பிரதேச நூலகங்களின் புத்தகங்கள் எல்லாம் குண்டு வீசி அழிக்கப்பட்டுள்ளன. போர் முடிந்தவுடன் கைப்பற்றப்பட்ட பகுதிகளில் இந்த அறிவழிப்பு நடைபெற்றது. இன நூலெரிப்பு வன்முறை என்பது,1981இல் ஆரம்பிக்கப்பட்டு மிகவும் விரிவுபடுத்தப்பட்டது. அத்துடன் சரித்திரத்தை, பண்பாட்டை, அழிக்கும் தொன்மங்களை அழிக்கும் செயற்பாட்டின் மற்றொரு செயல்தான் ஆலயங்கள், சிலைகள், சமாதிகள், தொல்லியல் மையங்கள், பண்பாட்டு புலங்கள் முதலியவற்றை அழித்தலும் ஆகும். இதுவும் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அது மாத்திரமின்றி தமிழ் மக்களின் பாரம்பரிய, தமிழ் பண்பாட்டு பூமியில் அதற்கு மாறான இன, மத அடையாளங்களை நிறுவுவதும் ஒரு வகையில் பாரம்பரியத்தை, பண்பாட்டை அழிக்கும் செயலாகும். இதற்கு சிறந்த எடுத்துக்காட்டாக கொக்கிளாயில் தற்போது நிறுவப்படும் புத்த விகாரையைக் குறிப்பிடலாம். ஆக, அறிவழிப்பு, சரித்திர அழிப்பு, பண்பாடழிப்பு வெவ்வேறு வடிவங்களில் இன்னும் தொடர்கிறது என்பதே மிகவும் அதிர்ச்சியூட்டும் கொடூரம். இதுவே, இருபதாம் நூற்றாண்டின் மிகக்கொடிய இன, நூலெரிப்பு வன்முறை இன்னமும் புரிந்து கொள்ளப்படாதிருக்கிறது என்பதையும் உணர்த்துகிறது. #யாழ்நூலகம் #இனஅழிப்பு #ஈழத்தமிழ்மக்கள் #இலங்கைத்தீவு #தெற்காசியா #ஈழத்தமிழர்போராட்டம் #Jaffnalibrary
குளோபல் தமிழ் செய்திகளுக்காக தீபச்செல்வன்
Spread the love