சமூக ஆர்வலர் முகிலன் காணாமல் போன வழக்கு விசாரணையில் துப்பு கிடைத்துள்ளதாக, குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் குற்றப் பிரிவின் காவல்துறையினர் தெரிவித்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
முகிலன் காணாமல் போய் 112 நாட்கள் கடந்துள்ள நிலையில் அவரைக் கண்டுபிடித்துத் தருமாறு கோரி மனித உரிமைகள் செயற்பாட்டாளர் ஹென்றி திபேன் நேற்றையதினம் சென்னை உயர் நீதிமன்றத்தின் ஆட்கொணர்வு மனுத் தாக்கல் செய்திருந்தார்.
ஏற்கெனவே குறித்த வழக்கின் விசாரணையின்போது விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் குற்றப் பிரிவுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
இந்நிலையில், குறித்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்த போது மனுதாரர் தரப்பில், ஸ்டெர்லைட் தொடர்பான ஆவணங்களை வெளியிட்ட இரண்டு நாள்களுக்குள் முகிலன் காணமல் போய் இருப்பதாகவும், அவரை விரைவில் கண்டுபிடித்து தருமாறு கோரினர்.
அந்தவகையில், முகிலன் வழக்கு விசாரணையின் நிலை அறிக்கையை மூடப்பட்ட உறையில் குற்றவியல் விசாரணைத் திணைக்களத்தின் குற்றப் பிரிவினர் தாக்கல் செய்தனர். அதை ஏற்றுக் கொண்ட நீதிபதிகள், முகிலன் வழக்கு விசாரணையில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாகவும், இது குறித்து துப்பு கிடைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ள காவல்துறையினர் அதை வெளியில் கூறினால் வழக்கு விசாரணை பாதிக்கப்படும் என தெரிவித்துள்ளதாகவும், அவர்களுக்கு கால அவகாசம் வழங்க வேண்டும் எனவும் தெரிவித்து வழக்கு விசாரணையை மூன்று வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.
கடந்த பெப்ரவரி 15ஆம் திகதி ஸ்டெர்லைட் நிறுவனத்துக்கு எதிராக தூத்துக்குடியில் நடத்தப்பட்ட போராட்டத்தின்போது 14 பேர் தமிழக காவல்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்திருந்தமை குறித்த ஆவணப்படமொன்றை சென்னையில் வெளியிட்ட சமூக ஆர்வலரான முகிலனை அன்றுமுதல் காணவில்லை என்பது குறி;பிபடத்தக்கது
#சமூக ஆர்வலர் #முகிலன் #துப்பு #காணாமல் போன #ஸ்டெர்லைட்