அவசர சட்டத்துக்கு பதிலாக கொண்டு வரப்படும் முத்தலாக் தடை மசோதாவுக்கு மத்திய அமைச்சரவை நேற்றையதினம் ஒப்புதல் வழங்கியுள்ளது. பாராளுமன்ற கூட்டத்தொடர் எதிர்வரும் 17ம்திகதி ஆரம்பமாகவுள்ள நிலையில், பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நேற்றையதினம் டெல்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை கூட்டத்தில் பல்வேறு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டன. இந்த மசோதாக்கள் பாராளுமன்ற கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்பவுள்ளன.
இவ்வாறு ஒப்புதல் பெறப்பட்ட மசோதாக்களில் முத்தலாக் தடை மசோதா முக்கியமானதாகும். முத்தலாக் முறை மூலம் முஸ்லிம் பெண்களுக்கு விவாகரத்து வழங்குவதை தடை செய்யும் வகையில் முன்னைய பா.ஜனதா ஆட்சியில் 2 முறை அவசர சட்டம் கொண்டு வரப்பட்டன. பின்னர் இந்த அவசர சட்டத்துக்கு பதிலாக பாராளுமன்றத்தில் மசோதாக்களும் தாக்கல் செய்யப்பட்ட போதும் அந்த 2 மசோதாக்களும் எதிர்க்கட்சிகளின் எதிர்ப்பால் மாநிலங்களவையில் கிடப்பில் உள்ளன.
தற்போது புதிய அரசு அமைந்திருக்கும் நிலையில் புதிதாக மசோதா தாக்கல் செய்து சட்டமாக்க வேண்டி உள்ளதன்படி இந்த முத்தலாக் தடை மசோதா தாக்கல் செய்யப்படுகின்றது
இது தவிர காஷ்மீர் இடஒதுக்கீடு திருத்தம் மசோதா கல்வித்துறை சீர்திருத்த மசோதா ,காஷ்மீரில் ஜனாதிபதி ஆட்சியை மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்க வகை செய்யும் மசோதா போன்றவைக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
#முத்தலாக் #தடை மசோதா #மத்திய அமைச்சரவை #ஒப்புதல்