இந்தியா முழுவதும் 16 கோடி பேர் மது அருந்துவதாகவும், 3.1 கோடி பேர் கஞ்சா பயன்படுத்துவதாகவும் ஆய்வொன்றின் மூலம் தெரியவந்துள்ளதாக மாநிலங்களவையில் மத்திய அமைச்சர் தாவர்சந்த் கெலாட் தெரிவித்துள்ளார்.
நாட்டில் மது உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு தொடர்பாக மாநிலங்களவையில் கவன ஈர்ப்பு தீர்மானம் கொண்டு வரப்பட்டமைக்கு பதிலளித்து பேசிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
கடந்த 2018-ம் ஆண்டு தேசிய போதை அடிமை சிகிச்சை மையம், எய்ம்ஸ் மற்றும் 10 மருத்துவ நிறுவனங்கள் மற்றும் 15 தன்னார்வ தொண்டு நிறுவனங்களும் பங்கேற்று மேற்கொண்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
இந்த அமைப்புகளை சேர்ந்த 1500-க்கும் மேற்பட்டவர்கள் 10 வயது முதல் 75 வயது வரையிலானவர்களை சந்தித்து ஆய்வு நடத்தியதாகவும் அதன்படி நாடு முழுவதும் 16 கோடிக்கும் அதிகமானோர் மது அருந்தி வருவதும் சுமார் 3.1 கோடி பேர் கஞ்சா பயன்படுத்தி வருகின்றமையும் தெரிய வந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளர். மேலும் 77 லட்சம் பேர் பிற போதைப்பொருட்களை உபயோகித்து வருகின்றனர் எனக் கண்டறியப்பட்டு உள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.