ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட அவுஸ்ரேலியர்கள் மீண்டும் நாடு திரும்புவதற்கு தடை விதிக்கும் சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நேற்று இதுகுறித்த சட்டமூலம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்த நிலையில், அதற்கு அவுஸ்ரேலிய பாராளுமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.
ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக, உலகின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் ஏராளமான பெண்கள் சிரியா சென்று அங்கு பயங்கரவாதிகளை திருமணம் செய்து கொள்கின்றனர். தற்போது ஐ.எஸ். பயங்கரவாத அமைப்பு தோற்கடிக்கப்பட்ட நிலையில், குறித்த பெண்களும் அவர்களின் குழந்தைகளும் சிரியாவிலுள்ள தடுப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் சுமார் 50 பேர் அவுஸ்ரேலியர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு ஆதரவாக செயல்பட்ட பெண்களை மீண்டும் நாட்டுக்குள் அனுமதித்தால், அது நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தலாக அமையும் என பல்வேறு தரப்பினரும் அச்சம் வெளியிட்டு வந்தனர். இதனையடுத்து, சிரிய அகதிகள் முகாம்களிலிருந்து பெண்கள் மற்றும் குழந்தைகளை திரும்பப் பெறுவதை 2 ஆண்டுகளுக்கு நிறுத்திவைப்பதற்கான சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டுள்ளது.