அச்சுறுத்தல் தொடர்பில் சட்டத்தரணி கலாநிதி கு.குருபரன்
3 இளைஞர்கள் கடத்தல் – பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகளுக்கு அச்சுறுத்தல் :
நாவற்குழி இராணுவ முகாம் அதிகாரியால் கைது செய்யப்பட்டு வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட 3 இளைஞர்கள் தொடர்பான ஆள்கொணர்வு மனுக்கள் சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றில் இன்று விசாரணைக்கு எடுக்கப்பட்ட நிலையில் அதில் பாதிக்கப்பட்டோர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கலாநிதி கே.குருபரன் மற்றும் சட்டத்தரணி எஸ்.சுபாசினி ஆகியோரை நீதிமன்ற வளாகத்துக்குள் வைத்து ஒளிப்படம் எடுத்து அரச புலனாய்வுப் பிரிவினர் என நம்பப்படும் நபர்கள் அச்சுறுத்தல் விடுத்துள்ளனர்.
நீதிமன்ற வளாகத்துக்குள் அமைந்துள்ள சட்டத்தரணிகள் ஓய்வறைக்கு முன்பாக சட்டத்தரணிகள் இருவரும் உரையாடிக்கொண்டிருந்த போது, அந்த இடத்தில் பிரசன்னமாகியிருந்து அரச புலனாய்வாளர்கள் என நம்பப்படும் சிலர் சட்டத்தரணிகளை தமது அலைபேசியில் ஒளிப்படம் எடுத்துள்ளனர்.
அதனைக் கண்ட சட்டத்தரணி கே.குருபரன், அங்கிருந்தவர்களை உதவிக்கு அழைத்து ஒளிப்படம் எடுத்தவர்களைத் துரத்திச் சென்ற போதும் அவர்கள் வாகனத்தில் ஏறித் தப்பித்துவிட்டனர் என்று தெரிவிக்கப்பட்டது.
“சட்ட மா அதிபர் திணைக்களத்தின் வாகனத்தில் பயணித்த அரச புலனாய்வாளர்களே எம்மை புகைப்படம் எடுத்து அச்சுறுத்தல் விடுத்தனர். மேலதிக மன்றாடியார் அதிபதி செய்திய குணசேகர, பயணித்த வாகனத்திலிருந்தும் புலனாய்வாளர் ஒளிப்படம் எடுத்தார்.
இதுதொடர்பில் சட்ட மா அதிபருக்கு முறைப்பாடு வழங்க உள்ளோம். அவர் இதுதொடர்பில் உரிய நடவடிக்கை எடுப்பார் என நம்புகின்றோம்” என்று சட்டத்தரணி கலாநிதி கே.குருபரன் தெரிவித்தார்.
1996ஆம் ஆண்டு நாவற்குழி படைமுகாமில் இராணுவ அதிகாரியாகவிருந்த துமிந்த கெப்பிட்டிவலான தலைமையிலான படையினர், கைது செய்து கொண்டு சென்ற 24 இளைஞர்கள் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டனர். அவர்களில் 3 இளைஞர்கள் காணாமல் ஆக்கப்பட்டமை தொடர்பில் அவர்களது பெற்றோரால் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் ஆள்கொணர்வு எழுத்தாணை மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
2017ஆம் திகதி நவம்பர் மாதம் இந்த ஆள்கொணர்வு மனுக்கள் யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டன. யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் இந்த ஆள்கொணர்வு மனுக்களை பூர்வாங்க விசாரணையுடன் தள்ளுபடி செய்ய சட்ட மா அதிபர் திணைக்களம் பல ஆட்சேபனைகளை முன்வைத்தது.
எனினும் சட்ட மா அதிபர் திணைக்களத்தின் அனைத்து ஆட்சேபனைகளையும் நிராகரித்த யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், மனுதாரர்களின் கோரிக்கைகள் தொடர்பில் விசாரணை ஒன்றை முன்னெடுத்து யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு உரிய பரிந்துரையை வழங்குமாறு சாவகச்சேரி நீதிவான் நீதிமன்றுக்கு உத்தரவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. #இளைஞர்கள் #கடத்தல் #சட்டத்தரணிகளுக்கு #அச்சுறுத்தல் #நாவற்குழி #ஆள்கொணர்வு #கே.குருபரன்