Home இலங்கைடயகம சந்திரிகாமம் தோட்டத்தில்   தீ விபத்து – 12 குடியிருப்புகள் எரிந்து நாசம்

டயகம சந்திரிகாமம் தோட்டத்தில்   தீ விபத்து – 12 குடியிருப்புகள் எரிந்து நாசம்

by admin

டயகம காவல்துறைப்  பிரிவிற்குட்பட்ட டயகம சந்திரிகாமம் தோட்டத்தில் 05.08.2019 அன்று (திங்கட்கிழமை) இரவு 9 மணியளவில் ஏற்பட்ட தீ விபத்தில் 12 தொழிலாளர் குடியிருப்புகள் தீக்கிரையாகியுள்ளன. இதில் சில வீடுகள் முற்றாகவும், சில வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 09 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வீட்டில் இருந்தவா்கள் கூச்சலிட்டதை அடுத்து அயலவர்கள் ஓடி வந்து தீயை பாரிய சிரமத்திற்கு மத்தியில் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துள்ளனர். எனினும் சில வீடுகளில் இருந்த சில பொருட்களை மாத்திரம் அவர்களால் தீக்கிரையாகாமல் வெளியில் கொண்டு வர முடிந்துள்ளது.

  சில வீடுகளில் இருந்த பெருமளவிலான வீட்டு உபகரணங்கள், பெறுமதியான ஆவணங்கள், தங்க நகைகள், பாடசாலை மாணவர்களின் சீருடைகள் மற்றும் பாடப் புத்தகங்கள் தீக்கிரையாகியுள்ளன.

இந்த தீ விபத்தினால் லயன் தொகுதியில் அமைந்திருந்த 12 வீடுகள் சேதமடைந்ததுடன் இந்த வீடுகளில் குடியிருந்த 09 குடும்பங்களை சேர்ந்த 49 பேர் தற்காலிகமாக சந்திரிகாமம் தமிழ் வித்தியாலயத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த தீ விபத்து ஏற்பட்டதற்கான காரணம் இதுவரையும் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கும் டயகம காவல்துறையினர், நுவரெலியா காவல்துறை கைரேகை அடையாளப்பிரிவுடன் இணைந்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக தெரிவித்துள்ளனர்.  #டயகம #தீவிபத்து  #குடியிருப்புகள் #நாசம்

(க.கிஷாந்தன்)

 

 

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More