பாறுக் ஷிஹான்
யு.எஸ்.எயிட் நிறுவனத்தின் ஆலோசகர் கேலி நாஸ் மற்றும் அம்பாறை மாவட்ட புத்திஜீவிகள், ஊடகவியலாளர் சந்திப்பு காலை கல்முனை சீ பிறிஜ் விருந்தினர் மண்டபத்தில் இடம்பெற்றது.
இன்று (13.08.19) இடம்பெற்ற இக்கலந்துரையாடலில் இலங்கைத் தீவில் பரவியுள்ள தீவிரவாதத்தை கட்டுப்படுத்துவது எவ்வாறெனவும் சிவில் சமூகத்தின் மத்தியில் என்னென்ன திட்டங்களை வகுத்து தீர்வுகளைப் பெற்றுக் கொள்ளலாம் என கலந்துரையாடப்பட்டது.
இதில் பல்கலைக்கழக பீடாதிபதி பள்ளிவாசல் தலைவர் பிரதேச செயலாளர் உள்ளுராட்சி மன்ற உறுப்பினர் பொறியியலாளர் என பலரும் கலந்துகொண்டனர். மேலும் இதனை தொடர்ந்து அம்பாறை மாவட்ட ஊடகவியலாளர் போரத்தில் அங்கம் வகிக்கும் பிரதிநிதிகளுடன் மற்றுமொரு கலந்துரையாடல் இடம்பெற்றது.
இக்கலந்துரையாடலில் கடந்த ஏப்ரல் 21ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் நாட்டில் ஏற்பட்ட அசாதாரண மாற்றத்தினால் பொது மக்களிடையே ஏற்பட்டுள்ள சவால்கள் தொடர்பாகவும் இதற்கு எவ்வாறு தீர்வை பெறலாம் என்ற விடயம் தொடர்பில் கேட்டறியப்பட்டது.
இதன் போது இவ்விரு கலந்துரையாடலில் யு.எஸ்.ஏ.ஐ.டி நிறுவனத்தின் அதிகாரி ஐவன் ராஸியா ஐக்கிய அமெரிக்க இலங்கைக்கான தூதரகத்தில் பணியாற்றும் அதிகாரி நௌசாத் ஜப்பார் ஆகியோர் உடனிருந்தனர். மேற்குறித்த இவ்விரு கலந்துரையாடலிலும் எந்தவொரு ஊடகவியலார்களுக்கும் செய்தி சேகரிக்க அனுமதியளிக்கப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.