போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன மேற்கொண்ட தீர்மானத்திற்கு சார்பாக வடக்கிலும் மக்கள் குரல் மேலெழுந்துள்ளது.
இந்த தீர்மானம் தொடர்பில் டிஜிட்டல் தொழிநுட்பத்தினூடாக மக்கள் கருத்துக் கணிப்பொன்று அண்மையில் யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற Enterprises Sri Lanka கண்காட்சி வளாகத்தில் இடம்பெற்றதுடன், அதில் பங்குபற்றிய 20,634 பேரில் 94.89% சதவீதத்தினர் ஜனாதிபதி அவர்களின் தீர்மானத்திற்கு சார்பாக வாக்களித்துள்ளனர்.
யாழ் மாவட்டம் முழுவதும் பரவியுள்ள சட்டவிரோத போதைப்பொருள் வியாபாரம் காரணமாக பிள்ளைகள் மற்றும் பெண்கள் உள்ளிட்ட அனைவரும் அதிக அழுத்தங்களுக்கு உள்ளாகியுள்ளதுடன், அவர்களின் ஒரேயொரு வேண்டுகோளாக அமைவது இந்த போதைப்பொருள் வியாபாரத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதேயாகும்.
இவ்விடயம் தொடர்பில் எந்தவொரு அரச தலைவரும் மேற்கொள்ளாத வகையில் தீர்மானங்களை மேற்கொண்டு அதிக அர்ப்பணிப்புடன் செயற்படும் ஜனாதிபதி அவர்களின் செயற்பாடுகளை இதன்போது பாராட்டிய அம்மக்கள், தமது பிள்ளைகளை நேசிக்கும் அனைத்து குடிமக்களும் போதைப்பொருள் வியாபாரிகளுக்கு எதிராக அணிதிரள வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர்.
இதேபோன்றதொரு செயற்திட்டம் அண்மையில் அநுராதபுரம் வலிசிங்க ஹரிச்சந்திர மைதானத்தில் இடம்பெற்ற Enterprises Sri Lanka கண்காட்சி வளாகத்திலும் இடம்பெற்றதுடன், அங்கு வருகைதந்த 27,168 பேரில் 94.77% சதவீதமானோர் போதைப்பொருளின் பிடியிலிருந்து நாட்டையும் எதிர்காலத் தலைமுறையையும் பாதுகாப்பதற்காக போதைப்பொருள் வியாபாரிகளுக்கு மரண தண்டனை வழங்க வேண்டும் என்ற ஜனாதிபதி அவர்களின் தீர்மானத்திற்கு சார்பாகவே வாக்களித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.