மாந்தை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட தேவன் பிட்டி கிராமத்தை சேர்ந்த அதிகளவான குடும்பங்கள் பெண்தலைமைத்துவ குடும்பங்களாக காணப்படுகின்ற நிலையில், குறித்த கிராமத்தை சேர்ந்த அதிகளவான பெண்கள் நுண்நிதி நிறுவனங்களிடம் கடன் பெற்றுள்ளனர்.
இந்தப் பெண்கள் மத்தியில் நுண் நிதி கடன் தொடர்பாகவும் நுண் நிதி நிறுவனங்கள் மற்றும் நுண் நிதி தொடர்பாக தேசிய ரீதியில் நடைமுறையில் உள்ள சட்டங்கள் தொடர்பாகவும் தெளிவு படுத்தும் விதமாக ஏற்பாடு செய்யப்பட்ட வீதி நாடகம் மற்றும் கலந்துரையாடல் நிகழ்வு மன்னார் சமூக பொருளாதார மேம்பாட்டுக்கான நிறுவனம் (MSEDO) ஏற்பாட்டில் அதன் குழு தலைவர் ஜாட்சன் பிகிறாடோ தலைமையில் தேவன் பிட்டி மீனவ சங்க கட்டிடத்தில் நேற்று வெள்ளிக்கிழமை இடம் பெற்றது.
குறித்த நிகழ்வில் நுண் நிதி நிறுவனங்களிடம் கடன் பெறும் போது நிதி நிறுவனம் அரச அனுமதி பெற்ற நிறுவனமா? என்பது தொடர்பாக எவ்வாறு அறிவது என்பது தொடர்பாகவும் பெரும் கடன்களை சரியான விதத்தில் பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசனைகளும் வழங்கப்பட்டது.
குறித்த பெண்கள் எதிர் கொள்ளும் பிரச்சினைகளை சட்ட ரீதியாக மேற்கொள்ளவதற்கான சட்ட ஆலோசனைகளும் வழங்கப்பட்டதுடன் பெண் தலைமைத்துவ குடும்பத்தலைவிகளின் கருத்துக்களும் பெறப்பட்டது.
அதன் போது கருத்து தெரிவித்த பெண்கள் அரசாங்கம் இதற்கான மாற்று நிதி கருத்திட்டத்தை கொண்டு வந்தால் மாத்திரமே தாங்கள் கடன் தொல்லைகளில் இருந்து விடு படமுடியும் எனவும் அத்துடன் அரசாங்கமே இனி வரும் நாட்காளில் இலகுவழி மூலம் கடன் வழங்க முன் வர வேண்டும் என தெரிவித்துள்ளனர்.