கேப்பாபிலவு மக்கள் , முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையக இராணுவ உயர்அதிகாரி மற்றும் ஆளுநர் கலாநிதி சுரேன் ராகவன் அவர்களுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று (20) கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.
இந்த சந்திப்பின்போது இராணுவத்தினரால் விடுவிக்கப்படாத கேப்பாபிலவு மக்களின் 59.5 ஏக்கர் காணிகள் விடுவிப்பது தொடர்பில் ஆராய்ந்ததுடன் அப்பகுதி மக்கள் தங்களது காணிகளை அடையாளங்காண்பதற்காக இராணுவத்தினர் இணக்கம் தெரிவித்துள்ளனர்.
கேப்பாபிலவில் காணிகளை இனங்கண்டு அவை இராணுவத்திற்கு தேவையானதாக அமையின் அவற்றுக்கு இதே வளம் கொண்ட மாற்றுக்காணிகளையும் வாழ்வாதரமும் வழங்க முன்வருவதாக கௌரவ ஆளுநர் அவர்கள் குறிப்பிட்டார். இதன்போது அப்பகுதி மக்கள் தமக்கு அவர்களது பூர்வீக காணிகளே வேண்டும் என்று தெரிவித்தனர். அவ்வாறெனில் முதலில் இராணுவத்தின் வசமுள்ள காணிகளை அடையாளப்படுத்த இராணுவ முகாமிற்குள் குறித்த மக்களை ஒரே நாளில் மூன்று பிரிவுகளாக செல்வதற்கான அனுமதியினை வழங்குமாறு கௌரவ ஆளுநர் அவர்கள் முல்லைத்தீவு பாதுகாப்பு தலைமையக இராணுவ உயர்அதிகாரியிடம் தெரிவித்தார். இதன்போது இராணுவ உயர்அதிகாரியும் இணக்கம் தெரிவித்துள்ளார்.
இந்த சந்திப்பில் வன்னி நாடாளுமன்ற உறுப்பினர் , வடமாகாண காணி ஆணையாளர் , காணி உத்தியோத்தர்கள் , நில அளவையாளர் மற்றும் அரச அதிகாரிகள் , முல்லைத்தீவு மாவட்ட இராணுவத்தளபதி உள்ளிட்ட கேப்பாபிலவு மக்கள் கலந்துகொண்டனர்.