தனது அரசாங்கத்தில் தராதரம் பாராது தவறு செய்தவர்களுக்கு தண்டனை வழங்குவதாக தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். தற்போதைய அரசியல்வாதிகள் ஊழல், மோசடிகளுடன் நேரடியாக தொடர்புபட்டு சட்டவிரோத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார். எல்பிடிய பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பு ஒன்றில் உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டை கட்டியெழுப்ப வேண்டுமாயின் தற்போதைய அரசியல் மோதல் நிலைமையை மாற்றியமைக்க வேண்டும் எனவும் தான் ஆட்சிக்கு வந்தவுடன் ஊழல், மோடிகளில் ஈடுபட்ட அனைவருக்கும் தண்டனை வழங்கப்படுவது உறுதி எனவும் அது தொடர்பில் சந்தேகம் கொள்ள வேண்டாம் எனவும் அவர் கூறினார்.
அவ்வாறு ஊழல்,மோசடிகளின் மூலம் சேர்த்து வைத்துள்ள சொத்துக்களை மீண்டும் பொது மக்கள் பாவனைக்கு உட்படுத்துவதாகவும் அவர் தெரிவித்தார். தற்போதைய ஜனாதிபதிக்கும் முன்னாள் ஜனாதிபதிகளுக்காகவும் பெருமளவு அரச நிதி செலவிடப்படுவதாகவும், ஆகவே பொது மக்கள் பணத்தின் மூலம் வழங்கப்படும் சலுகைகள் பறிக்கப்பட வேண்டும் எனவும் கூறினார்.
முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வேறு வருமான மார்கம் இல்லை என்றால் அல்லது அவர்களை பராமரிக்க யாரும் இல்லை என்றால் மாத்திரம் சமூக பாதுகாப்பு நிதியில் இருந்து ஒருதொகை பணத்தை வழங்குவதாகவும் அவர் குறிப்பிட்டார். அவ்வாறு இல்லை என்றால் முன்னாள் ஜனாதிபதிகளுக்கு எந்தவித சலுகைகளையும் வழங்க போவது இல்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். சஜித் பிரேமதாசவால் இதனை தெரிவிக்க முடியாது எனவும் அது குறித்து பேசினால் அவரின் தாயார் வீட்டை இழக்க வேண்டியேற்படும் எனவும் தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திசாநாயக்க மேலும் தெரிவித்துள்ளார்.