Home இலங்கை ஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன ? நிலாந்தன்…

ஐந்து கட்சிகளின் கூட்டு: அடுத்தது என்ன ? நிலாந்தன்…

by admin


ஜனாதிபதித் தேர்தலில் முழு அளவிலான தமிழ் பேரத்தை பிரயோகிப்பது என்றால் ஒரே தெரிவு ஒரு பொதுத் தமிழ் வேட்பாளர்தான். ஆனால் அதற்கு எந்த ஒரு தமிழ்க் கட்சியும் தயாராக இருக்கவில்லை. அப்படி ஒரு பொது வேட்பாளரை நிறுத்த வேண்டும் என்று சிந்தித்த சுயாதீனக் குழுவும் மிகவும் பிந்தி விட்டது. பல்கலைக்கழக மாணவர்கள் அதைவிட பிந்தி விட்டார்கள்.

சுயாதீன குழு கட்சித் தலைவர்களை சந்தித்தபோது அவர்கள் என்ன சொன்னார்கள்? ஒரு பொது வேட்பாளரை நிறுத்துவதற்கு காலம் பிந்தி விட்டது என்றுதானே சொன்னார்கள்? அப்படி என்றால் அதை குறித்து முதலில் சிந்தித்திருக்க வேண்டியது யார்? சில ஆயர்களும் சில சாமியார்களும் சில அரசியல் விமர்சகர்களும்தானா? அரசியலை முழு நேரத் தொழிலாகக் கொண்ட அதற்காக சம்பளம் வாங்குகின்ற அரசியல் தலைவர்கள்தானே அதைப்பற்றி முதலிலேயே சிந்தித்திருக்க வேண்டும்? அதை சிந்தித்திருக்க வேண்டிய வேண்டிய ஒரு காலகட்டத்தில் சிந்திக்காமல் இருந்துவிட்டு அதைப்பற்றி சிந்தித்த ஒரு சிவில் அமைப்பிடம் நீங்கள் பிந்திவிட்டீர்கள் என்று கூறும் தலைமைகளை எப்படி பார்ப்பது?

அது அவர்களுடைய தொழில் அல்லவா? ஆனால் அவர்களில் எவரும் அதை பற்றி சிந்தித்திருக்கவில்லை. எந்த சிங்களத் தலைவரோடு எப்படி டீல் வைத்துக் கொள்ளலாம் என்றுதான் சிந்தித்தார்கள்.

ஆனால் தமிழ்ப் பேரம் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரோடுதான் தொடங்குகிறது என்பது ஏன் அவர்களுக்கு தெரியாமல் போனது? தமிழ் தலைவர்கள் யாருமே நீண்டகால நோக்கில் சிந்திப்பதில்லையா? தூர நோக்கோடு சிந்தித்திருந்தால் ஒரு பொதுத் தமிழ் வேட்பாளரை திட்டமிட்டு கட்டியெழுப்பி இருந்திருக்கலாம். அது நடக்கவில்லை. அதைப் பற்றி சிந்தித்திருக்கவேண்டிய தலைவர்கள் சிந்திக்கவில்லை. சில ஆயர்களும் சாமியார்களும் கருத்துருவாக்கிகளுமே சிந்தித்தார்கள். அதுவும் மிகப் பிந்தி சிந்தித்தார்கள். இது எதைக் காட்டுகிறது?

தமிழ் தலைவர்களுக்கு எது பேரம் என்பதில் சரியான தெளிவு இல்லை. இன்னும் கூராகச் சொன்னால் பேர அரசியலைக் குறித்து அவர்களிடம் சரியான தரிசனம் எதுவும் கிடையாது. இதுதான் உண்மை. இவ்வாறான ஒரு பாரதூரமான வெற்றிடத்தில்தான் ஒரு சுயாதீன குழு ஒரு பொது வேட்பாளரை குறித்து மிகவும் பிந்திச் சிந்தித்து. என்பதனால் அது காரியம் ஆகவில்லை. இப்பொழுது அதெரிவு ஒரு சிவாஜிலிங்கமாக சுருங்கிவிட்டது. இனி சிவலிங்கத்தை ஏற்றுக் கொள்வதா இல்லையா என்று முடிவெடுக்க வேண்டும்.

ஒரு பொதுத் தமிழ் பொது வேட்பாளர் இல்லாத வெற்றிடத்தில் அதற்கு நிகரான மற்றொரு தெரிவு பகிஷ்கரிப்பு தான். ஆனால் பகிஸ்கரிப்பு எனப்படுவது வெளியுலகத்துக்கு எதிர்மறையான செய்தியை கொடுக்கும். மேலும் தமிழ் மக்களுக்கு இப்பொழுது மிஞ்சி இருப்பது ஒரே செயல் வழி. அதுதான் தேர்தல் வழி. தமக்கு மிஞ்சியிருக்கும் ஒரே செயல் வெளியையும் மூடுவதா? அல்லது அந்த வெளிக்குள் இறங்கி விளையாடி பார்ப்பதா?

இல்லை. விளையாட முடியாது. பகிஸ்கரிக்கப்போகிறோம் என்று சொன்னால் அது ஒரு நிலைப்பாடு மட்டுமல்ல. மாறாக அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்ற வேண்டும். அதை ஒரு தமிழ் கூட்டு உளவியல் ஆக மாற்ற வேண்டும். அதற்கென்று வளங்களைக் கொட்டி உழைக்க வேண்டும். அப்படி செய்யும் போது கீழிருந்து மேல் நோக்கிய ஒரு மக்கள் மைய கட்டமைப்பை கட்டி எழுப்பலாம். அது ஜனாதிபதி தேர்தலுக்கு மட்டுமல்ல அதற்குப் பின்னரும் குறிப்பிட்ட கட்சிக்கு ஒரு பெரிய அடித்தளமாக அமையும். ஆனால் அப்படி உழைத்து பகிஷ்கரிப்பை வெற்றி பெறச் செய்ய தமிழ் தேசிய மக்கள் முன்னணி தயாரா?

தமிழ்பொது வேட்பாளரையும் பகிஸ்கரிப்பையும் விடடால் ஏனைய எல்லா தெரிவுகளும் மங்கலானவைதான் துலக்கமில்லாதவைதான். சஜித்துக்கு சாதகமானவைதான். இதைப் பிழிவாகச் சொன்னால் பொது வேட்பாளருக்கும் பாஸ்கரிப்க்கும் இடையில் இருக்கும் எந்த ஒரு தெரிவும் சஜித்துக்கு எப்படி தமிழ் மக்களின் ஆணையை வாங்கிக் கொடுப்பது என்பது குறித்து மறைமுகமான வழிகளில் சிந்திப்பதுதான். அந்த முடிவை எப்படி புதிய வார்த்தைகளால் நியாயப்படுத்துவது என்று சிந்திப்பதுதான்.

இவ்வாறு மங்கலான தெரிவுகளைக் கொண்ட ஒரு பேரக் களத்தில்தான் பல்கலைக்கழக மாணவர்கள் உருவாக்கிய ஐந்து கட்சிகளின் கூட்டு செயற்படப்போகிறது. ஒரு தமிழ்ப் பொது வேட்பாளரை நிறுத்தினால்தான் தமிழ் பேரம் துலக்கமாகவும் சிங்கள வேட்ப்பாளர்களை இறங்கி வரச் செய்யும் விதத்திலும் கூர்மையானதாக இருக்கும். அப்படி ஒரு பொது வேட்பாளர் இல்லாத வெற்றிடத்தில்தான் சஜித் பிரேமதாச இறுமாப்போடு கதைக்கிறார். கோத்தபாய ராஜபக்ச அதை இனவாதிகளுக்கு தீனியாக மாற்றுகிறார்.

உண்மையில் ஒரு தமிழ் பொது வேட்பாளருக்கு தமிழ் தலைவர்கள் தயாரில்லை என்பது ஒருவிதத்தில் இறங்கி வருவதுதான். உச்சமான பேரத்தை பிரயோகிக்க தமிழ்த் தலைவர்கள் தயாரில்லை என்பத்தைத்தான் அது காட்டுகிறது. ஆனால் அப்படி இறங்கி வந்து ஒரு பொது ஆவணத்தை தயாரித்திருக்கும் ஐந்து கட்சிகளையும் அஸ்கிரிய பீடத்தின் பிரமுகர் எவ்வாறு பார்க்கிறார்? அஸ்கிரிய பீடத்திற்கு அதிகம் நெருக்கமான ராஜபக்ச அணி அதை எப்படி பிரச்சாரம் செய்கிறது?
அதைவிடக் கேவலம் சஜித் என்ன சொல்கிறார் என்பது. எந்த ஒரு நிபந்தனைக்கும் அவர் அடிபணிய மாட்டாராம். நிபந்தனைகளுக்கு இணங்கி லட்சக்கணக்கான வாக்குகளை பெறுவதை விடவும் நிபந்தனைகளுக்கு இணங்காது தோல்வியடைந்து வீட்டுக்கு செல்லவும் அவர் தயாராம். இப்படிப்பட்ட சஜித்துக்கு தமிழ் மக்கள் தமது ஆணையை வழங்க வேண்டும் என்று எப்படி கேட்பது?

இதுதான் பிரச்சினை. ஐந்து கட்சிகளும் கூட்டாக தயாரித்த ஆவணம் அதன் கால முக்கியத்துவம் காரணமாக தென்னிலங்கை இனவாதிகளுக்கு தீனியாக மாறிவிட்டது. தமிழ் மக்கள் ஐக்கியப்பட்டது போல ஒரு தோற்றம் உருவாகியது தென்னிலங்கையில் இனவாதிகளை ஐக்கிய படுத்துவிட்டது என்று சில கையாலாகாத தமிழர்கள் புலம்பத் தொடங்கி விட்டார்கள். அப்படி என்றால் தமிழ் மக்கள் ஒன்றுபட்டு தமது பேரத்தை முன்வைக்கக் கூடாது என்று இவர்கள் கேட்கிறார்களா?

ஆனால் தென்னிலங்கையில் உள்ள இனவாதிகள் உருப்பெருக்கி காட்டும் அளவுக்கு ஐந்து கட்சிகளின் ஐக்கியமானது நிரந்தரமாக இருக்குமா என்பதே சந்தேகம்தான். ஏனெனில் ஜனாதிபதி தேர்தலுக்காக அவசரமாக ஏற்படுத்தப்பட்ட ஐக்கியம் இது. இப்படி ஒரு ஐக்கியத்துக்கு போக வேண்டிய தேவை அதில் சம்பந்தப்பட்ட கட்சிகளுக்கு இருந்தது. குறிப்பாக கூட்டமைப்புக்கு அது ஒரு வரப்பிரசாதம். உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் கிட்டத்தட்ட தனது வாக்கு வங்கியில் 35 விகிதத்தை அக்கட்சி இழந்து விட்டது. கடந்த ஐந்து ஆண்டுகளாக ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து திருத்திய வீதிகள் வாக்குகளாக மாறுமா என்ற சந்தேகம் உண்டு. குறிப்பாக ரணில் வேட்பாளராக நின்றிருந்தால் கூட்டமைப்பு இந்தளவுக்கு இறந்கி வந்திருக்குமா? எனவே கிடைத்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அவர்கள் கூட்டமைப்பை தற்காலிகமாக மீள இணைத்து விட்டார்கள்.

அதிலும் குறிப்பாக தமிழ் தேசிய மக்கள் முன்னணியை நீக்கியதன் மூலம் அவர்களுக்கு இரட்டை லாபம். அதை விடப் பெரிய ஒரு லாபமும் உண்டு. அது என்னவெனில் மேற்படி ஐந்து கட்சிகளின் கூட்டை தென்னிலங்கையில் உள்ள இனவாதிகள் எந்த அளவுக்கு எதிர்க்கிறார்களோ அதே அளவுக்கு தமிழ் வாக்குகள் இக்கூட்டின் பின் செல்லும். தமிழரசுக் கட்சி வழமைபோல தேர்தல் நேரத்தில் எதிர்ப்பு அரசியல் என்ற முகமூடியை வசதியாக அணிந்து கொண்டு தனது வாக்கு வங்கியை பெருக்கிக்கொள்ள இது உதவும். இப்படிப் பார்த்தால் மேற்படி ஐந்து கட்சிகளின் கூட்டினால் அதிக லாபம் கூட்டமைப்புக்குத்தான்.ஒரு மாற்று அணியை நோக்கி சிந்திக்கப் பட்டு வந்த ஒரு சூழலில் அந்த மாற்று அணிக்கு பதிலாக கூட்டமைப்பு மீள இணைக்கப்பட்டு விட்டதா?

ஈ.பி.ஆர்.எல்.எப்பும் தமிழ் மக்கள் கூட்டணியும் தெரிவிக்கும் கருத்துக்களின்படி கூட்டினை ஒரு கொள்கைக் கூட்டாக அவர்கள் கருதவில்லை என்று தெரிகிறது. இது தற்காலிகமானது. ஜனாதிபதி தேர்தலுக்கானது. எதிர்காலத்தில் நிரந்தரமான ஒரு கூட்டை உருவாக்குவது என்று சொன்னால் அதற்கு முதலில் ஒரு கொள்கை ஆவணம் வரையப்பட வேண்டும். அதன்மீது ஐக்கியத்துக்கான உடன்படிக்கை எழுதப்பட வேண்டும். எனவே இக்கூட்டை நிரந்தரமானதாகக் கருதத் தேவையில்லை.
பொதுஆவணத்தை உருவாக்கும் பணிகள் முடிவடைந்த பின் பல்கலைக்கழக மாணவர்கள் வெளியிட்ட அறிக்கையில் அறிக்கையின் இறுதிப் பகுதியில் ஒரு விடயம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. ……..’தமிழ் கட்சிகள் அனைத்தும் ஒருமித்த நிலைப்பாட்டினை எடுக்க வேண்டும் என்று இம் முயற்சியில் இறங்கிய நாம் ஐந்து கட்சிகள் உடன்பட்டு வந்த நிலையில் அவர்களிடம் இப்பொது ஆவணத்தை ஒப்படைத்து இதனடிப்படையில் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு தெரிவித்ததோடு அவர்கள் அரசியல் தலைவர்கள் என்ற வகையிலும் நாம் பொறுப்பு வாய்ந்த மாணவர்களாய் ஒன்றிணைக்கும் முயற்சியிலேயே ஈடுபட்டவர்கள் என்ற வகையிலும் இவ்விடயத்தினை அவர்களிடமே ஒப்படைத்து விலகிக்கொண்ட நிலையில் கலந்துரையாடல்களின் முன்னேற்றங்களின் அடிப்படையில் அரசியல் கட்சி தலைவர்களே தொடர்ச்சியாக இவ் விடயத்தினை கையாள்வார்கள்’

என்று அதில் கூறப்பட்டுள்ளது. அப்படி என்றால் பல்கலைக்கழக மாணவர்கள் ஐந்து கட்சிகளின் கூட்டை உருவாக்கும் பொழுது அனுசரணையாளர்களாகத் (குயஉடைவையவழைn) தொழிற்பட்டார்களா அல்லது வசதி வழங்குனர்களாகத்(டுழபளைவiஉள)தொழிற்பட்டார்களா? அனுசரணையாளர்களாகச் செயற்;பட்டிருந்திருந்தால் பல்கலைக்கழகம் ஐக்கியத்தை ஏற்படுத்திய பின் விலகி நிற்க கூடாது. கட்சிகளின் கூட்டு தென்னிலங்கையில் உள்ள பிரதான வேட்பாளர்களோடு பேசி ஒரு முடிவை எடுக்கும் வரை மாணவர்கள் அனுசரணை புரியவேண்டும். அந்த முடிவைப் பொறுத்து அடுத்தகட்ட தீர்மானத்தை எடுப்பதற்கும் மாணவர்கள் அனுசரணை புரிய வேண்டி இருக்கும்.

ஒரு பல்கலைக்கழக மாணவர் அமைப்பு அவ்வாறு அரசியல் கட்சித் தலைவர்களை ஒருங்கிணைத்து அனுசரணை புரியும் அளவுக்கு தொழில்சார் திறனுடனும் இருப்பதில்லை. எனவே இது விடயத்தில் கட்சிகள் கொள்கை ஆவணத்தை விட்டு விலகிச் செல்லாமல் இருப்பதற்கும் சிங்கள வேட்பாளர்கள் ஆவணத்தை ஏற்றுக் கொள்ள மறுக்கும் பொழுது அடுத்த கட்டத்தைப் பற்றி சிந்திப்பதற்கும் அல்லது கூட்டமைப்பு கூறுவது போல ஆவணத்தில் உள்ள கோரிக்கைகளில் குறைந்தது அறுபது விகிதத்தையாவது ஏற்றுக் கொள்ளும் ஒரு வேட்பாளரோடு எந்த அடிப்படையில் ஒத்துழைப்பது என்பதற்கு உரிய வழிவகைகளை கண்டு பிடிப்பதற்கும் பொருத்தமான அனுசரணையாளர்கள் தேவை.

அதைக் கட்சித் தலைவர்களை செய்து முடிப்பார்கள் என்று எதிர்பார்க்க முடியாது. பேரவையால் நியமிக்கப்பட்ட சுயாதீனக் குழுவும் பல்கலைக்கழக மாணவர்களும் தலையீடு செய்திருக்காவிட்டால் அரசியல்வாதிகள் மேற்கண்ட முடிவை எடுத்திருப்பார்களா? நிச்சயமாக இல்லை. எனவே இனிமேலும் அரசியல் கட்சிகளின் மீது சிவில் சமூகங்களின் தலையீடு அவசியம். அவாறான தார்மீகத் தலையீடே தமிழ் மக்களின் அடுத்த கட்ட அரசியலுக்குள்ள ஒரே பாதுகாப்பு உத்தரவாதம் ஆகும்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More